வியாசர்பாடி சுந்தரம் நகரில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பு: சுகாதார சீர்கேடு அபாயம் ,.. அதிகாரிகள் அலட்சியம்

பெரம்பூர்: சென்னையில் ஆண்டுதோறும் மழையின் அளவு குறைந்து கொண்டே செல்வதால் தண்ணீரை அனைவரும் சேமிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடு செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் மழைநீர் சேமிப்பு திட்டம். வீடுகளில் தேங்கும் மழைநீரை சேமித்து உபரி நீரை சாலைகளில் வீணாகாமல் இருபுறமும் பள்ளங்கள் அமைத்து நீரை சேமிக்க  அரசாங்கம் பல கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால் வாரியம் என்ற ஓர் வாரியத்தை உருவாக்கி அதன் மூலம் சாலைகளின் இரு மருங்கிலும் பள்ளங்கள் தோண்டி அதில் நீர் உட்புகாதவாறு மழைநீர் வடிகால்வாய்களை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் மழை பெய்தால் தேவையான உபரிநீர் அந்த கால்வாயில் இறங்கி சிறிது சிறிதாக பூமிக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். மேலும், உபரியாக உள்ள அனைத்தும் அடையாறு கூவம் ஆற்றில் கலக்கும். எக்காரணத்தைக் கொண்டும் மழைநீர் வடிகால்வாய்களில் குப்பைகள் கொட்டுவதோ. கழிவு நீர் கலப்பதோ கூடாது என மிக கண்டிப்பாக அரசு கூறினாலும், ஒரு சில பொதுமக்கள் அதைக் கேட்பதில்லை.

பொதுமக்கள்தான் இப்படி உள்ளார்கள் என்று பார்த்தால் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளும் இதே மனப்போக்குடன் தான் செயல்படுகின்றனர். சென்னை மாநகராட்சி 4வது மண்டலம் வியாசர்பாடி சுந்தரம் நகர் மெயின் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் கழிவுநீர் குளம்போல தேங்கி நின்றது. இதனையடுத்து, அப்பகுதியில் ராட்சத ெஜனரேட்டர் மூலம் கழிவுநீரை எடுத்து அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விடப்பட்டது. தற்போது இரண்டு மாதங்களாகியும் இதே நிலையே நீடித்து வருகிறது. அந்த இடத்தில் உள்ள கழிவுநீர் அடைப்புகளை சரி செய்யாமல் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் மழைநீர் கால்வாயில் விட்டு வருகின்றனர்.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அரசாங்கம் எதற்காக ஒரு பணியை செய்ததோ அந்தப் பணியை முழுமைப்படுத்த படாமல் அதிகாரிகள் அலட்சியத்தால் வீணடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சேமிக்கப்படும் மழைநீர் முழுவதும் வீணாக போகிறது. பூமிக்குள் செல்லும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நோக்கத்தில் இந்த பணி செயல்படுத்தப்பட்டது. ஆனால் மழைநீருக்கு பதிலாக கழிவுநீரை குடிநீர் வாரிய அதிகாரிகளே உட்புகுத்துவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.  எனவே உடனடியாக கழிவுநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை சரி செய்து மழைநீர் வடிகால் வாரிய கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும், லாரிகள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: