புறம்போக்கு, கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்:  திருவொற்றியூரில் புறம்போக்கு, கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச  வீட்டுமனை பட்டா வழங்ககோரி அப்பகுதியினர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான கார்கில் நகர், ராஜாஜி நகர், கலைஞர் நகர் மற்றும் எண்ணூர் தாழங்குப்பம் உள்ளிட்ட 28 கிராமங்களில் ஏராளமானோர் அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில்  பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இந்நிலையில், தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள்  சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நேற்று திருவொற்றியூர் தாசில்தார்  அலுவலக வாசலில்  ஒன்று திரண்டனர். பின்னர்  இலவச பட்டா கேட்டு  தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பிறகு இதற்கான கோரிக்கை  மனுவை  தாசில்தார் ஜெயராமனிடம் கொடுத்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: