ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியரின் செல்போன், செயின் பறிப்பு: மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் திணறல்

தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நோய்களுக்காக எப்போதும் உள்நோயாளி மற்றும் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இந்நிலையில், இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் இரவு 3 டாக்டர்கள் செல்போனை டேபிளில் வைத்துவிட்டு, ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். பின்னர் வேலை முடிந்து 3 டாக்டர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, அவர்களது செல்போன் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டனர். இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் 24 மணி நேர சிகிச்சை, மருந்து வழங்கும் பணி நடைபெறுவதால், நேற்று முன்தினம் இரவு திருவள்ளூரை சேர்ந்த விஜயலட்சுமி (57) என்ற பெண் ஊழியர் மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை ஒரு மர்ம நபர் பறிக்க முயன்றார். இதனால் விஜயலட்சுமி அலறி சத்தம் போடவே, அவரை கீழே தள்ளிவிட்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதனால் விஜயலட்சுமிக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்புகார்களின்பேரில் ஸ்டான்லி மருத்துவமனை போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் காவல் பணியில் இருக்கும் செக்யூரிட்டி மற்றும் ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இத்தகைய மர்ம நபர்களின் நடமாட்டங்களை கண்டறிவதில் அங்குள்ள பாதுகாப்பு போலீசார் திணறி வருகின்றனர். இதுபோன்ற செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத சம்பவங்களை தடுக்க, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களிலும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என நோயாளிகளும், டாக்டர்களும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: