×

ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு  உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால்,இதே வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்திருந்ததால், அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஜாமீன் கேட்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிறப்பித்த உத்தரவில், “ப.சிதம்பரம் மனுவிற்கு வரும் திங்கட்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’’ என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Chidambaram: Supreme Court ,bail hearing , P. Chidambaram, Enforcement Department, Notices, Supreme Court
× RELATED ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம்...