டெல்லியில் பிரதமருடன் சரத்பவார் திடீர் சந்திப்பு: மகாராஷ்டிரா மழை பாதிப்புக்கு உதவ கோரிக்கை

புதுடெல்லி: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடக்கோரி பிரதமர் மோடியிடம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  கோரிக்கை மனு அளித்தார்.  மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடியை டெல்லியில் திடீரென சந்தித்து பேசினார்.    நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் நடந்த இந்த சந்திப்பின்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடக்கோரி 3 பக்க மனுவை பிரதமரிடம் அவர் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த மழையால் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாசிக் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சோயாபீன்ஸ், நெல், தினை, கம்பு, மக்காச்சோளம், தக்காளி, வெங்காயம் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. கடந்த 10 மாதங்களில் மட்டும் நாசிக் மாவட்டத்தில் விவசாயிகள் 44 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.  நாக்பூரில் 35,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தியும் மழையால் சேதமடைந்துள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது சரத்பவார் கருத்து கூற மறுத்துவிட்டார்.

Related Stories: