×

நன்கொடை அளித்தவர்கள் யார் என்பது உள்பட தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த முழுவிவரத்தை தெரிவிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பது உள்பட தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.  அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுக்காக தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுகின்றன. இதில் நன்கொடை அளிப்பவர்கள் யார் என்ற விவரம் இடம்பெற்றிருக்காது. இதனால் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் இந்த திட்டத்தை `அரசியல் லஞ்ச திட்டம்’ என எதிர்க்கட்சிகள் வர்ணிக்கின்றன.இது தொடர்பாக ேநற்று காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் டெல்லியில் பேட்டியளித்தனர். குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜ அரசு சில தொழில் அதிபர்கள் உதவியுடன் 90 சதவீத வர்த்தகத்தை நாட்டில் மேற்கொள்கிறது. தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவது பண மோசடிக்கு வழிவகுத்துள்ளது.

மேலும் அரசியல் கட்சிகளின் நிதி திரட்டும் முறையில் இருந்த வெளிப்படைத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது என்றார். ஆனந்த் சர்மா கூறியதாவது: தேர்தல் நிதி திட்டத்தில் நன்கொடை அளிப்பவர் தனது அடையாளத்தை மறைக்க முடியும். அதே நேரத்தில் அந்த பணம் யாரிடம் இருந்து வந்தது என்பதை அரசியல் கட்சிகளால் அறிந்து கொள்ள முடியும். எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் முழுவிவரங்களை தெரிவிக்க வேண்டும். பாஜவுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை அளித்தவர்கள் பற்றிய விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும். தற்போது நடைபெறும் கூட்டத் தொடரிலேயே இதுபற்றிய விவரங்களை இரு அவைகளிலும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : disclosure ,Congress , Donations, Election Fund Papers, Congress
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...