அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக சிறுவர்கள் வாக்குமூலம் நித்தியானந்தா மீது கடத்தல் உள்பட பல பிரிவுகளின் கீழ் புதிய வழக்கு

* வெளிநாட்டில் தங்கியிருப்பதால் பிடிவாரன்ட் பெற நடவடிக்கை

* ஆசிரம பெண் நிர்வாகிகள் இரண்டு பேர் அதிரடி கைது

அகமதாபாத்: தங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத் ஆசிரம பெண் நிர்வாகிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.  பெங்களூருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன் சர்மா, இவரது மனைவி உமேஷ்வரி. இவர்களுக்கு 21, 19, 15 வயதுகளில் மகள்களும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜனார்த்தன் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று வந்தபோது, குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களை அங்கேயே கல்வி பயிலுவதற்காக சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் ஹிராபூரில் உள்ள நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சவாஜ்னாபீடம் ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ஜனார்த்தனன் அங்கு சென்றுள்ளார். ஆனால் ஆசிரம நிர்வாகிகள் அவரை விரட்டியடித்துவிட்டதாக தெரிகிறது.  இதையடுத்து அவர், ‘‘எனது நான்கு குழந்தைகளையும் அனுமதியின்றி நித்தியானந்தாவின் ஹிராபூர் ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை மீட்டு தர வேண்டும்’’ என்று குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக ஆசிரமத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. பின்னர் சிஐடி தனிப்படை போலீசார் கடந்த திங்களன்று அதிரடியாக ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்து ஜனார்த்தனின் 15 வயது மகள், 13 வயது மகன் உட்பட 4 பேர் மீட்கப்பட்டனர். ஆனால் ஜனார்த்தனின் மற்ற இரண்டு மகள்களையும் காணவில்லை என தெரிகின்றது.  

இதனையடுத்து ஆசிரமத்தில் இருக்கும் தனது மகள்கள் லோபமுத்ரா(21), நந்திதா(19) ஆகியோரை மீட்டுத்தரக் கோரி அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

தனது மகள்கள் கடத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.  ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 9 மற்றும் 10 வயது சிறுவர்கள் அளித்த வாக்குமூலத்தில்,  தாங்கள் நகரில் உள்ள குடியிருப்பில் 10 நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், குழந்தை தொழிலாளர்களாக தங்களை பயன்படுத்தியதோடு சித்ரவதை செய்ததாகவும் கூறினார்கள். ஆசிரமத்துக்கு வருவோர்களிடம் பல்வேறு சடங்கு பொருட்களை கொடுத்து நன்கொடை வசூலிக்க கூறி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சிறுவர்கள் தெரிவித்தனர். சிறுவர்களின் இந்த புகாரின் அடிப்படையில் சாமியார் நித்தியானந்தா, ஆசிரம பெண் நிர்வாகிகள் மா பிரியதத்வா மற்றும் மா பிரன்பிரியா ஆகியோருக்கு எதிராக போலீசார் நேற்று முன்தினம் கடத்தல், அடைத்து வைத்தல், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஜனார்த்தனின் மகள் நந்திதா டிரினிடாட்டில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். தேவைப்படும்போது நீதிமன்றத்தின் முன் ஆஜராவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். எனினும் போலீசார் அவரை காணவில்லை என வழக்கு பதிந்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டில் இருக்கிறார். எனவே அகமதாபாத் சிஐடி போலீசார் நித்தியானந்தாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  டிரினிடாட் தீவில் சாமியாரின் பிடியில் 19 வயது இளம்பெண் உள்ளதால், இளம்பெண் எதற்காக அங்கே சென்றார்? இளம்பெண் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எங்கே இருக்கிறார்?

குஜராத்தில் உள்ள சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தின் மீது புகார்கள் எழுந்துள்ளதால் அகமதாபாத் காவல்துறை நித்தியானந்தா இருப்பிடம் குறித்து அறிந்துகொள்வதற்கு முயன்று வருகின்றது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் கடைசியாக நித்தியானந்தா, தென்அமெரிக்காவின் ஈக்வடாரில் இருந்ததாக தெரிகிறது. தற்போது எங்கு இருக்கிறார் என்பதை கண்டறியும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்றனர்.

2 சிறுவர்களிடம் விசாரணை

நித்தியானந்தாவுக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்ட 4 சிறுவர்களில் இரண்டு பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களது பெற்றோரை அடையாளம் காணும் வகையில் சிறுவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

ஸ்கைப்பில் பேசிய போலீசார்

வீடியோவில் பேசிய இளம்பெண் தான் டிரினிடாட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் ஸ்கைப்பில் பேசியுள்ளனர். அகமதாபாத் போலீஸ் எஸ்பி ஆர்வி ஆசாரி கூறுகையில், வீடியோ வெளியிட்ட பெண்ணிடம் நாங்கள் ஸ்கைப்பில் பேசினோம். அவர் சில காரணங்களால் வெளியே இருப்பதாகவும், அந்த வேலை முடிந்தவுடன் திரும்பி வருவதாகவும் தெரிவித்தார். அவரது இருப்பிடத்தை கண்காணிக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.

 இளம்பெண் கூறிய டிரினிடாட் மற்றும் டொபாக்கோ குடியரசானது, தென் அமெரிக்க நாடான வெனீசுலாவின் வடக்கிழக்கே அமைந்துள்ள மிகப்பெரிய தீவுகளாகும். இந்த இரு தீவுகளுடன் மேலும் 21 சிறிய தீவுகளும் இந்த குடியரசில் உள்ளடங்கியுள்ளது.

Related Stories: