×

ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் பாகிஸ்தான் அணியில் 16 வயது சிறுவன் நசீம் ஷா

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதல் விளையாடிய டி20 தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா (16 வயது) அறிமுகமாவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமை நசீம் ஷாவுக்கு (16 வயது, 279 நாள்) கிடைத்துள்ளது. இதுவரை 7 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள நசீம், அவற்றில் 27 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டங்களில் பாபர் ஆஸம், ஆசாத் ஷபிக், ஹரிஸ் சோகைல், அசார் அலி ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவித்ததால் பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.  அந்த அணி, ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோற்றுள்ளது. இம்முறையாவது இந்த மோசமான வரலாற்றை மாற்றியமைக்க வேண்டிய நெருக்கடியும் அசார் அலி & கோவுக்கு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் டிம் பெயின் தலைமையிலான ஆஸி. அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் கூடுதல் சாதகமாக இருக்கும். டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேடு, டிராவிஸ் ஹெட், பேங்க்ராப்ட், டிம் பெயின் என ஆஸ்திரேலியாவின் வலுவான பேட்டிங் வரிசை பாக். பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் வேகக் கூட்டணியும், நாதன் லயன் சுழலும் பாக். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.

இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்க வரிந்துகட்டுவதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரான் பேங்க்ராப்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபஸ்ஷேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேடு. பாகிஸ்தான்: அசார் அலி (கேப்டன்), அபித் அலி, ஆசாத் ஷபிக், பாபர் ஆஸம், ஹரிஸ் சோகைல், இப்திகார் அகமது, இமாம் உல் ஹக், இம்ரான் கான், காஷிப் பட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், முகமது மூசா, நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா.


Tags : Nasim Shah ,Test ,Australia ,Pakistan , Australia, Test, Pakistan squad, 16 year old boy, Naseem Shah
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...