தெலங்கானாவில் கடந்த 47 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை நிறுத்த முடிவு: நிபந்தனையின்றி பணியில் சேர்க்க வலியுறுத்தல்

திருமலை: தெலங்கானாவில் கடந்த 47 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை நிறுத்த போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் தங்களை அரசு நிபந்தனையின்றி பணியில் சேர்க்க வலியுறுத்தி உள்ளனர்.தெலங்கானா மாநில போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், சம்பள உயர்வு உள்ளிட்ட 26  கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர் ஈடுபட்டு  வந்தனர். 47 ஆவது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தங்களது போராட்டத்தை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் போக்குவரத்து தொழிலாளர்கள்  அனைவரையும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்  இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கை தொழிலாளர்கள்  நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் கூட்டு  நடவடிக்கை குழு தலைவர் அஸ்வத்தாமா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:செப்டம்பர் மாதம் பணிபுரிந்தும் சம்பளம் கிடைக்காத நிலையில் தற்போது மூன்று மாதங்களாக சம்பளம் இல்லாமல்  போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளனர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உயர் நீதிமன்றம் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது.தொழிலாளர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதால் எங்களது போராட்டத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிபந்தனையற்ற வகையில் எங்களை  பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் அரசு, தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமா அல்லது என்ன முடிவு எடுக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  அரசு எடுக்கும் முடிவை எதிர்பார்த்து போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories: