அமெரிக்காவில் குடியேறிய இந்தியர் எண்ணிக்கை 489 சதவீதம் உயர்வு: மொத்தம் 26.50 லட்சம் பேர் வசிக்கின்றனர்

மும்பை:  அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்க கம்யூனிட்டி சர்வே என்ற அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு அமெரிக்க மக்கள் தொகை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 32.7 கோடியில் 13.7 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2010ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை விட வெளிநாட்டினரின்  எண்ணிக்கை 0.4 சதவீதம் அதிகமாகும். இதில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 26.50 லட்சம். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.5 சதவீதம் அதிகம்.  இதன்படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில்  இந்தியர்களின் சதவீதம் தற்போது 5.9 சதவீதம். இது மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு.

கடந்த 2010ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்காவுக்கு வந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை மட்டும் 8.7 லட்சமாகும். இது  கடந்த 2010ம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையை காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும்.  இதேபோல் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் சீனர்களின் எண்ணிக்கை 6.78 லட்சம் உயர்ந்துள்ளது. கடந்த 2010ல் அமெரிக்காவில் வசிக்கும் சீனர்களின் எண்ணிக்கை 21.6 லட்சமாக இருந்தது.1990ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 4.50 லட்சமாக மட்டும் இருந்தது. ஆனால், தற்போது 26.50 லட்சமாக இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதாவது 1990ல் இருந்து இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி  வரையிலான கணக்கு பிரகாரம், 489 சதவீதம் அளவுக்கு இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

150 இந்தியரை திருப்பி அனுப்பியது

அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக லட்சக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இதேபோன்று விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 150 இந்தியர்களை  அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.  அமெரிக்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கதேசம் வழியாக நேற்று காலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களிடம் உள்ள ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள்  சரிபார்த்த பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார்கள்.

Related Stories: