சென்னையில் இருந்து வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர சத்தம்; பயணிகள் அலறல்: கும்பகோணம் அருகே ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தம்

கும்பகோணம்: சென்னையில் இருந்து கும்பகோணம் வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகளால் அலறினர். சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், இரவு 9.50மணிக்கு திருநாகேஸ்வரம் வந்து கொண்டிருந்தது. அப்போது  தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ரயில் ஏதோ விபத்தில் சிக்கி கொண்டது என கருதி பயணிகள் அலறினர். இந்த சத்தம் கேட்டதும் ரயிலின் வேகத்தை இன்ஜின் டிரைவர் குறைத்தார். பின்னர் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக கும்பகோணத்துக்கு ரயிலை டிரைவர் இயக்கி வந்தார். இரவு 10 மணிக்கு கும்பகோணம் வந்ததும் ரயில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் பிரியதர்ஷினியிடம் டிரைவர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த உழவன் எக்ஸ்பிரசை (தஞ்சை- சென்னை) கும்பகோணத்திலும், திருப்பதி எக்ஸ்பிரசை ஆடுதுறையிலும் நிறுத்தி வைக்க ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருநாகேஸ்வரம் சென்ற அதிகாரிகள், சத்தம் கேட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கும் எந்தவித தடயங்களும் இல்லை. எந்த அசம்பாவிதங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 ரயில்களையும் மீண்டும் இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைதொடர்ந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட 3 ரயில்களும் 2 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டு சென்றன.

Related Stories: