நாடாளுமன்ற துளிகள்.....

சூடான விவாதம்

வாட்ஸ்அப் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுதல் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவில் நேற்று கடும் விவாதம் நடந்தது. பாஜ எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் கூட்டணி கட்சியான லோக்  ஜனசக்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் விவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். முடிவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டதில் சரிசமமாக வாக்குகள் விழுந்த நிலையில், குழுவின் தலைவர் சசிதரூர் விவாதத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.  இதனால் இந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

சிட்பண்ட் மசோதா நிறைவேற்றம்

மாநிலங்களவையில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மற்றும் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதாவும், மக்களவையில் சீட்டு நிறுவனங்கள் சட்ட திருத்த மசோதாவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில்,  சீட்டு நிறுவன சட்ட திருத்த மசோதா, மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கவும், நிதி மோசடியாளர்களுக்கு கடுமையான தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கவும் வழி செய்வதாகும். இம்மசோதா காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி  எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியது. மற்ற 2 மசோதாக்களில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ள எம்பிக்கள் வலியுறுத்திய நிலையில் மாநிலங்களை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஒரே நாடு, ஒரே மொழிமத்திய அரசு திட்டமா?

கடந்த செப்டம்பரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரே நாடு, ஒரே மொழி திட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக, மாநிலங்களவையில்  கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘ஒரே நாடு ஒரே மொழி கொண்டு வரும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. நமது அரசியலமைப்பில் நாட்டின் அனைத்து  மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’’ என்றார். கடந்த 3 ஆண்டில் மதக்கலவரங்கள் குறைந்து வருவதாக கூறிய அவர், சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து சந்தேகம் கிளப்பியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாக  தேசிய குற்ற ஆவண அறிக்கையில் எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

‘பின்வரிசைக்கு தள்ளிட்டாங்களே’

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவுத் அவைத்தலைவர் வெங்கையா நாயுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ‘‘அவையில் நான் அமரும் இருக்கை, 3வது வரிசையில் இருந்து 5வது  வரிசைக்கு பின்னுக்கு தள்ளப்பட்டிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். இந்த முடிவானது, சிவசேனாவின் உணர்வுகளை காயப்படுத்த வேண்டும், அதன் குரலை நசுக்க வேண்டுமென்று சிலரால் வேண்டுமென்றே எடுக்கப்பட்டதாக  கருதுகிறேன். இந்த முடிவு பற்றி முறைப்படி எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் செயல். எனவே முன்வரிசையில் எனக்கு மீண்டும் இடமளிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். மகாராஷ்டிராவில்  பாஜ-சிவசேனா கூட்டணி முறிந்த நிலையில், ராவுத்தின் இருக்கை மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: