ஜெயலலிதா தொடங்கி வைத்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கான தொகுப்பு திட்டங்கள் முடக்கம்

சிறப்பு செய்தி: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா என 2போக சாகுபடி முக்கியமானது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்றாலும், நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யும்  விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதையடுத்து இத்திட்டம் ஆண்டுதோறும் குறுவை தொகுப்பு திட்டம் என அறிவிக்கப்பட்டு  அதற்குரிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.இத்திட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்கான தரிசு உழவுப் பணியை மேற்கொள்ள மானியமாக ஏக்கருக்கு ₹500 வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், விவசாயிகள் தரமான சான்று பெற்ற  விதைகள் பெற ஏதுவாக மானியமாக கிலோவிற்கு ₹10வீதம் 4500 மெட்ரிக்டன் விதைகள் வழங்கப்பட்டன. நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் இடங்களில் களை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பதால் களைக்கொல்லி மருந்து தெளிக்க  ஏக்கருக்கு ₹280 வீதம் மானியமாக ஏக்கருக்கு ₹2.50 லட்சம் வழங்கப்பட்டது.நெல் சாகுபடி ஆயத்த பணிகளான உழவு மற்றும் நடவு மேற்கொள்ளும் வகையில் நிலத்தை தயார்படுத்த 620 உழுவை இயந்திரங்கள், தலா ₹75 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கப்பட்டன. வரிசை நடவுக்கு ஏக்கருக்கு ₹4 ஆயிரம்  வழங்கப்பட்டன. பாசன நீர் குழாய்கள் 75 சதவீத மானியத்திலும், காவிரி டெல்டா வெண்ணாறு பகுதி மற்றும் கல்லணை பகுதியின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில் பசுந்தாள் உர விதைகள் 20,682 ஏக்கர் பரப்பிற்கு 100 சதவீத  மானியத்தில் வழங்கப்பட்டது.

மேலும் திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள், ஜிங் சல்பேட், உளுந்து விதை முழு மானியத்தில் வழங்கப்பட்டன. 12 மணி நேர மும்முனை மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 2.50 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று  வந்தனர். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்திற்காக ₹56.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு சம்பா சாகுபடி திட்டத்திற்காக ₹41.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு குறுவைத் தொகுப்பு திட்டத்திற்கு ₹32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சம்பா தொகுப்பு திட்டத்திற்கு நிதி  ஒதுக்கப்படவில்லை. இத்திட்டங்களின் மூலம் ஆண்டுதோறும் சம்பா பருவத்தில் மட்டும் டெல்டா மாவட்டங்களில் 10.70 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொண்டு 2.52 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர்.இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு சாகுபடி பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கரில் தற்போது சம்பா சாகுபடி பணிகள்  முடிந்து விட்டன. பொதுவாக தொகுப்பு திட்டம் சாகுபடி பணிகள் தொடங்கப்படும் நிலையிலேயே அறிவிக்கப்படும். அப்போது தான் இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள இயலும். ஆனால் இதுவரை இத்திட்டம் குறித்த எந்தவித  அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொகுப்பு திட்டத்தை ஜெயலலிதாவிற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 ஆண்டுகளாக (2017 மற்றும் 2018) செயல்படுத்தி வந்தார். கடந்த ஆண்டு குறுவைக்கு மட்டும் அறிவித்து சம்பாவிற்கு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்படவில்லை.  இந்த ஆண்டும் இத்திட்டத்தை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்த நிலையில் இனி இத்திட்டம் வராது என வேளாண்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் பல்வேறு எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, கடன் தொல்லை, வறட்சி, வெள்ளம் போன்றவைகளால் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் விவசாயிகள் அல்லாடி வந்தனர். இந்நிலையில் தொகுப்பு திட்டங்கள் மூலம் ஓரளவு  சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் ஜெயலலிதா தொடங்கி வைத்த இத்திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு ரத்து செய்துவிட்டதால் டெல்டா விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியது. எனவே இந்த ஆண்டு அரசின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி இத்திட்டத்தை இபிஎஸ் கிடப்பில் போட்டுவிட்டதாக ஆளும் தரப்பை சேர்ந்த  விவசாயிகளே குற்றஞ்சாட்டுகின்றனர். அதுவும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த எந்தவித முயற்சியும் எடுக்காதது விவசாயிகளை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.  விவசாயிகளுக்காக நான் பாடுபடுகிறேன் என மேடைக்கு மேடை வசனம் பேசும் துரைக்கண்ணு விவசாயிகளுக்காக குறிப்பாக சொந்த மாவட்ட விவசாயிகளுக்காக செய்தது என்ன என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியது. எனவே இந்த ஆண்டு அரசின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி இத்திட்டத்தை இபிஎஸ் கிடப்பில் போட்டுவிட்டதாக ஆளும் தரப்பை சேர்ந்த விவசாயிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related Stories: