கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு சம்பவம் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவனை அரிவாளால் வெட்டிய தாய்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவனை அரிவாளால் வெட்டி, மகளை காப்பாற்றினார் தாய். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 13 வயது மகள், அருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், நேற்று முன்தினம் அருகில் உள்ள சோளத்தோட்டத்திற்கு  கூலி வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி, தோட்டத்தில் வேலை செய்யும் தனது தாயை பார்க்க, காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த உறவுக்காரரான  ராஜேந்திரன் மகன் ராஜசேகர்(22) என்பவர், சிறுமியை அழைத்து பேசியுள்ளார். அப்போது திடீரென சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி,  தப்பி செல்ல முயன்றார். ஆனால், சிறுமியின் வாயை  பொத்தி, அருகிலுள்ள புதர் மறைவுக்கு தூக்கி சென்று, பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, அருகிலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த  சிறுமியின் தாய்,  ஓடி வந்து பார்த்தார்.

அப்போது, தனது மகளை ராஜசேகர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதை கண்டு பதறிப்போனார். உடனே மகளை காப்பாற்ற, அந்த வாலிபரை கைகளால் தாக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராஜசேகர், அருகில் இருந்த ஒரு பெரிய  கல்லை தூக்கி சிறுமியின் தாய் மீது வீசினார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த போதிலும், மகளை காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்தில், தோட்டத்தில் சோளத்தட்டு அறுக்க வைத்திருந்த அரிவாளை  எடுத்து ராஜசேகரை வெட்டினார். இதனால் அவர் அலறியபடி சிறுமியை விடுவித்தார். சத்தம் கேட்டு, அருகிலுள்ள தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த ராஜசேகர், காயத்துடன் அங்கிருந்து  ஓட்டம் பிடித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், ஊத்தங்கரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ராஜசேகரை கைது செய்தனர். ராஜசேகர் அங்குள்ள கல்லூரியில், முதுகலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: