×

மேட்டூர் நீர்மட்டம் நூறாவது நாளாக 100 அடிக்கு கீழ் குறையாமல் நீடிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம், தொடர்ந்து நூறாவது நாளாக 100 அடிக்கும் குறையாமல் உள்ளது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும், கடந்த ஜூலை முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து, அந்த அணைகளின்  பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து,  நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 13ம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு, அணையின் வரலாற்றில் 65வது  ஆண்டாக நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன் பின்னர் தொடர் மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் அடுத்தடுத்து 4 முறை, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில், அணையின்  நீர்மட்டம் தொடர்ந்து நூறாவது நாளாக, 100 அடிக்கு குறையாமல் உள்ளது.

 இதனால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணை  நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. விநாடிக்கு 8,143 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. டெல்டா  பாசனத்திற்கு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. அதேபோல், ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 2வது நாளாக,  நீர்வரத்து 7 ஆயிரம் கன
அடியாக நீடிக்கிறது.

Tags : Mettur , Mettur Water, Level becomes, 100th d, 100 feet
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்