×

தமிழக உள்ளாட்சி தேர்தல் எது வேண்டுமானாலும் கூட்டணியில் நடக்கலாம்: ஓ.பி.எஸ். பேட்டி

மதுரை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.அமெரிக்கா சென்றிருந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் கட்சிகளை துவக்கலாம். யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்று வந்தேன். அங்கு தமிழக அரசின் பல்வேறு  திட்டங்களுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும்  முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் துவங்குவது குறித்து பேசினேன். அவர்கள் இங்கே தொழில் தொடங்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.உலக வங்கியிடம் தமிழக வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பேசியுள்ளேன். அதுதொடர்பாக தமிழகம் வந்து பார்வையிட சம்மதம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது. மேலவளவு குற்றவாளிகளை விடுவித்ததில்  நீதிமன்றம் தங்களுடைய கருத்துகளை கூறியுள்ளது. அதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும். எங்களுடன் மேலும் சில கட்சிகள் பேசிக்கொண்டுள்ளன. அவர்களும் கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.  வீட்டு வசதி வாரியத்தின்  மூலமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு முதற்கட்டமாக 2020க்குள் 5 ஆயிரம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ‘நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்தால் இணைந்து கொள்ளட்டும். அதனால், எங்களுக்கு எதுவும் இல்லை. அதிமுக அடித்தளம் மிகவும் பலமாக இருக்கிறது. யார் சேர்ந்தாலும் அதுபற்றி  எங்களுக்கு கவலையில்லை’ என்றார்.

Tags : Tamil Nadu ,elections ,Government ,coalition , Local Government, Elections,coalition, OPS. Interview
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...