சுட்டுக்கொல்லப்பட்ட குமரி பெண் மாவோயிஸ்ட் அஜிதா உடலை பெற தாய் மறுப்பு: இறுதி சடங்கு செய்ய போலீஸ் முடிவு

நாகர்கோவில்: கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடியில் நடந்த போலீஸ்- மாவோயிஸ்ட் தாக்குதலில் குமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த சேவியர் என்பவரது மகள் அஜிதா மற்றும் தமிழகத்தை சேர்ந்த மணிவாசகம், சீனிவாசன்,  கார்த்திக் ஆகிய 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சீனிவாசன், அஜிதாவின் உடல் கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டன. சீனிவாசன் உடல் அடையாளம்  காண முடியாத அளவில் சிதைந்துள்ளது. அஜிதாவின் உடலை பெற்றுக்கொள்ள முதலில் ஆர்வம் காட்டிய அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பின்னர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.இதுதொடர்பாக கேரள போலீசார், உடலை 48 மணிநேரத்தில் அடையாளம் காட்டாவிட்டால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தனர். இந்தநிலையில் அஜிதாவின் உடல் இந்த நாட்டுக்கும் வேண்டாம். குடும்பத்திற்கும்  வேண்டாம் என்று அவரது போட்டோக்களை பார்த்து அடையாளம் காண்பித்த அவரது தாய் சொர்ணமேரி கேரள குற்றப்பிரிவு போலீசில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கேரள போலீஸ் குழுவுக்கு கடிதமும் அளித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு அஜிதாவை காண வேண்டும் என்ற ஆவல்,  இப்போது எங்களுக்கு இல்லை என்று அவரது சகோதரர்களும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.  தமிழக போலீசாரின் உதவியுடன் கேரள போலீசார் அஜிதாவின் வீட்டிற்கு சென்றிருந்தனர். அஜிதாவின் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று குடும்பத்தினர் உறுதிபட தெரிவித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கையில் கேரள  போலீசார் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

அதன்படி அவரது உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடந்த அட்டப்பாடி வனப்பகுதி, புதூர் பஞ்சாயத்து பகுதியில் வருகிறது. அங்குள்ள அதிகாரிகளுக்கு குற்றப்பிரிவு எஸ்பி சந்தோஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் உள்ளாட்சி அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதூரில் பொது மயானம் இல்லாததால் திருச்சூரில் வேறு  இடத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

Related Stories: