1 லட்சம் கோடி முறைகேட்டால் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை திறக்க முயற்சி

* அரசின் ‘ஆசியோடு’ உரிமதாரர்கள் ரெடி * 6 ஆண்டுக்கு பிறகு பிரச்னை விஸ்வரூபம்

சிறப்பு செய்தி: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி 1 லட்சம் கோடி முறைகேடு கண்டறிந்ததால் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்க பகீரத முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரம்  தலைதூக்குகிறது.தமிழகத்தில் பூதாகரமாகி புதையுண்டு கிடக்கும் ஊழல் விவகாரங்களில் மதுரை மாவட்ட கிரானைட் முறைகேட்டினை யாரும் மறக்க முடியாது. இந்த விவகாரத்தை, இங்கு கலெக்டராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கண்டறிந்து  வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து, 2013ல் மதுரை மாவட்டத்தில் அனைத்து கிரானைட் குவாரிகளும் இழுத்து மூடப்பட்டன. ஐகோர்ட் உத்தரவின்படி விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்ட சகாயம், மதுரையில் ஓராண்டு  முகாமிட்டு முழுமையாக அலசி ஆய்ந்து விசாரணை நடத்தினார்.நிலங்கள், நீராதாரங்கள் காலி: அப்போது அவரது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்தபோதும் அஞ்சவில்லை.   இவரது விசாரணையில், கிரானைட் கற்களுக்காக புராதன மலைகள், கண்மாய்கள், நீர்வரத்து வாய்க்கால் போன்றவை சுவடு தெரியாமல்  அழிக்கப்பட்டது, கற்சிற்பங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு சின்னாபின்னமானது, வெடியினால் வீடுகள் சேதமானது, இழப்பீடு கேட்டவர்களை மிரட்டி வீடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கியது, விளைநிலங்கள் பாழானது, சுற்றுச்சூழலை  மாசுபடுத்தியது. குவாரிக்காக நரபலி என மலை போல் புகார்கள் குவிந்தன.

  குவாரி முறைகேடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்புடைய மத்திய, மாநில அரசுத்துறை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரணை  நடத்தி ஆவணங்களுடன் ஆதாரங்களை திரட்டினார்.உச்சக்கட்டமாக மேலூர் அருகே மயானத்தில் கட்டிலில் படுத்து, விடிய விடிய சோதனை நடத்தி முடித்தார். அனைத்து ஆதாரங்களுடன் 2015 நவம்பரில் 600 பக்க அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், ‘‘கிரானைட்  ஊழலில் அரசுக்கு ₹1 லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கிரானைட் ஒப்பந்ததாரர்களும், அவர்களுக்கு துணைபோன ஆட்சியாளர்களும், அதற்கு உடந்தையாக இருந்த மத்திய, மாநில  அரசு அதிகாரிகளும் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு ஊழல் நடந்துள்ளது. எனவே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அளித்து இருந்தார்.இந்த கமிஷன் அறிக்கையை முடக்க  தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. மத்திய அரசின் புவியியல் (ஜியாலஜிகல்) மற்றும் கனிமவளத்துறைக்கு கடிதம் எழுதி, ‘‘சகாயம் கமிஷன் நடத்திய ஆய்வறிக்கையில் திருப்தி இல்லை. எனவே  அந்த கிரானைட் குவாரி பகுதிகளில் இந்திய அரசின் புவியியல் மற்றும் கனிமவளத்துறை சரியான முறையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்’’ என்று கோரியது. அதை மத்திய அரசு ஏற்கவில்லை. சகாயம் அறிக்கை அளித்து 4  ஆண்டுகளாகிறது. கிரானைட் குவாரிகள் 6 ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றன.

தமிழக அரசு சார்பில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி 86க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது, குவாரி உரிமதாரர்களுக்கு 3 ஆயிரம் கோடிக்கு அபராதம் விதித்து மதுரை  மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் 4 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. தோண்டி எடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களும் விற்பனைக்கு  அனுமதிக்கப்படாமல் ஆங்காங்கே திறந்தவெளியில் குவிந்து கிடக்கின்றன.இந்தச் சூழலில், மூடப்பட்ட குவாரி மற்றும் தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து கிரானைட் தொழிலில் ஈடுபட அதன் உரிமதாரர்கள் பல்வேறு முயற்சிகளை முடுக்கி விடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம்  நீதிமன்றம் மூலம் தடைகளை நீக்கும் முயற்சி, இன்னொரு பக்கம் பேரங்கள் நடத்தி ஆட்சி அதிகாரம் படைத்தவர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கி மன்றாடுவதாகவும் கூறப்படுகிறது.

அதன் ஒருகட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன் முறைகேட்டில் சிக்கிய முக்கிய கிரானைட் நிறுவனம் மீண்டும் தொழிலில் ஈடுபட அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு தள்ளுபடியானது.  அடுத்தடுத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பதால், கிரானைட் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு பூதமாக கிளம்பி விடுமோ என்ற அச்சம் புகார் கூறிய அப்பகுதி மக்கள்  மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால், குவாரிகளால் சிதைக்கப்பட்ட பாசன கால்வாய், விளைநிலங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. குவாரி வெடிகளில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் குவாரிகளா... என்ற கேள்வி  அலைபாய்கிறது. இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டால் மவுனம் சாதிக்கிறார்கள். புதைந்து கிடந்த கிரானைட் குவாரி விவகாரம் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கி இருப்பது, பரபரப்பூட்டி வருகிறது.

Related Stories: