திருச்சி அருகே அரசு பள்ளியில் இலவச லேப்டாப் கேட்டு மாணவர்கள் தர்ணா: தூண்டிவிட்டதாக சங்கத்தினரை கைது செய்ததால் பரபரப்பு

திருவெறும்பூர்: இலவச லேப்டாப் கேட்டு அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி அடுத்த காட்டூரில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 128 மாணவர்களில், 52 பேருக்கு 3 மாதத்திற்கு முன்பு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. மீதம் உள்ள 76 மாணவர்களுக்கு  லேப்டாப் வழங்கப்படவில்லை.  இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காததால் இதை கண்டித்தும், இலவச லேப்டாப் உடனடியாக வழங்க கோரி மாணவர்கள் நேற்று,  இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர்  மோகன் தலைமையில் பள்ளி நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் பாரதவிவேகானந்தர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர் சங்க செயலாளர் மோகன் குறுக்கிட்டு பேசியதால் ஆத்திரமடைந்த சிஇஓ அவரை கண்டித்ததுடன், மாணவர்களை  பள்ளிக்கு வரவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கும்படி தலைமையாசிரியரிடம் கூறினார். இது தொடர்பாக திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஞானவேல், தாசில்தார் ஞானாமிர்தம் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் பேசியதாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றினர். இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை மறித்ததால் பரபரப்பு  ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: