நெல்லை அருகே பிறந்து 17 நாளே ஆன பெண் குழந்தையை கடத்தி 1.20 லட்சத்துக்கு விற்பனை: தந்தை உள்பட 5 பேர் கைது

வி.கே.புரம்: நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே பிறந்து 17 நாளே ஆன பெண் குழந்தையை கடத்தி ₹1.20 லட்சத்துக்கு விற்றது தொடர்பாக தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம், விகேபுரம் அருகே ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசு (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் புஷ்பலதா மீண்டும் கர்ப்பமானார்.  நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17 நாட்களுக்கு முன் அவருக்கு ஆண், பெண் என ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4வதாக இரட்டை குழந்தை பிறந்ததால்  குடும்பத்தினர் கவலையடைந்தனர். நேற்று முன்தினம் மதியம் ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு ஜேசு வீட்டை விட்டு வெளியேறினார். அதிர்ச்சியடைந்த புஷ்பலதா, சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்தனர். இரவு  வரை ஜேசுவை ேதடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி நேற்று புஷ்பலதா விகேபுரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகபட்டியில் பதுங்கி இருந்த அவரை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, பெண் குழந்தையை ஆலங்குளம் சர்ச் தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம் ஒரு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு புரோக்கர்  மூலம் விற்றதாக கூறியுள்ளார்.  போலீசார், ஆலங்குளம் சென்று தங்கராஜ் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டனர்.இதையடுத்து ஜேசு, தங்கராஜ், புரோக்கர்கள் நெல்லையப்பன், கண்ணன் உள்பட 5 பேரை கைது செய்தனர். பிறந்து 17 நாளே ஆன பச்சிளங்குழந்தையை தந்தையே விற்ற சம்பவம் விகேபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: