நன்னடத்தை உறுதிமொழி மீறிய பிரபல ரவுடிக்கு 116 நாள் சிறை: துணை கமிஷனர் உத்தரவு

தண்டையார்பேட்டை: நன்னடத்தை உறுதிமொழி மீறிய பிரபல ரவுடிக்கு 116 நாள் சிறை விதித்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை தண்டையார்பேட்டை, சிவாஜி நகரை சேர்ந்தவர் குமரன் (21). பிரபல ரவுடி. இவர் மீது ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் குமரனை குற்றச்சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் ஆஜர்படுத்தினர். அங்கு குமரன், “இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன்” என துணை ஆணையரிடம் உறுதிமொழி வழங்கினார். இதைத் தொடர்ந்து அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் தண்டையார்பேட்டையை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஆனந்த் என்பவரை குமரன் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து 3 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்தார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நன்னடத்தை உறுதிமொழியை மீறியதாக குமரனை புழல் சிறையில் இருந்து நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் போலீசார் காவலில் எடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் முன் ஆஜர்படுத்தினர். குமரன் நன்னடத்தை உறுதிமொழியை மீறியதால், அவர் சிறையில் இருந்த நாட்களை கழித்து, 116 நாள் சிறைத்தண்டனை வழங்கினார். அதன்பேரில் குமரன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: