உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியா?: கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று ஆலோசனை  நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:நான் டாக்டர் பட்டம் வாங்க 65 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எனக்காக தொண்டர்கள் காட்டும் அன்பை தமிழக மக்களுக்கும்  காட்ட வேண்டும். அந்த அன்பு செயல் வடிவமாக மாறி, தமிழகத்துக்கு  பயனுள்ளதாக வேண்டும். ஆட்சிக்கு  வந்து  செய்வதை போல், அதற்கு முன்பே வேலை வாய்ப்பு, விவசாயம் போன்ற துறைகளை  மேம்படுத்தும் பணிகளை செய்வோம்.

அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அரசியலில் நானும், ரஜினியும் இணைவோம் என்று சொன்னேன். ரஜினியுடன் இணைவது, எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி. தமிழகத்துக்காக உழைப்போம் என்பதே இணைப்பின் முக்கிய செய்தி.  எனது  பணியை செயலில் காட்ட உள்ளேன். இணையும் தேதி குறித்து இப்போது சொல்ல முடியாது. எங்களின் நட்பை விட தமிழகத்தின் நலனே  முக்கியம்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான பிரியா  கூறுகையில், ‘ரஜினி, கமல்  இணைந்து செயல்பட்டாலும், கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும்  என்பது என் விருப்பம்’ என்றார்.

Related Stories: