தமிழக அரசு அவசர சட்டம்:அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் பிறப்பித்தார்

* மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல்

* பாஜ போர்க்கொடி: அதிமுக கூட்டணியில் மோதல் வெடித்தது

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை கவுன்சிலர்களே தேர்வு செய்வதற்கான புதிய அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  நேற்று பிறப்பித்தார். இந்த நடவடிக்கைக்கு கூட்டணிக் கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றமும் தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி  கொடுத்தது. இறுதியாக டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, தமிழக அரசும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் கடந்த சில மாதங்களாக செய்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கலெக்டர்களுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளது. அதிமுக விருப்ப மனு கடந்த 15, 16 ஆகிய தேதிகளில்  விருப்ப மனு வாங்கி முடித்து விட்டது.அதேநேரம் அதிமுகவில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் தங்கள் கட்சிக்கு மூன்று அல்லது இரண்டு சீட்டுகளை தர வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர். அதேபோன்று மொத்தமுள்ள 121 நகராட்சி தலைவர், 528 பேரூராட்சி தலைவர் பதவிகளிலும் தங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால், கூட்டணி கட்சிகளுக்கு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை வழங்க வேண்டிய நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டது. தலைவர் பதவிகளை  குறிவைத்து, டிடிவி அணிக்கு கூட போகாமல் காத்திருந்த நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. இந்தப் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம் என்று, கடந்த மாதம் அதிமுக  எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டுமானால் தற்போதுள்ள உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேயர்,  நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்வு செய்யும் நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து விட்டு, கவுன்சிலர்களே தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று முடிவு  செய்யப்பட்டது.கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக  உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு தற்போதுள்ள, நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டு கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் செய்து முடிவு  எடுக்கப்பட்டது. பின்னர், தமிழக அமைச்சரவையில் எடுத்த முடிவுக்கு ஒப்புதல் பெற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவையில் எடுத்த முடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்து நேற்று அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். அந்த சட்டத்தில் கூறி இருப்பதாவது: தமிழக அமைச்சரவையில் எடுத்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர், 121 நகராட்சி தலைவர், 528 பேரூராட்சி தலைவர்கள், முதல்  கவுன்சில் கூட்டத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே துணை மேயர் மற்றும் துணை தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோன்று இனி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் தேர்வுசெய்யப்படுவார்கள்.  இந்த தலைவர்கள் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள். அந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கவுன்சிலராக செயல்பட முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பதவிக்கு காலியிடம் வந்தால், புதிய தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு  செய்ய வேண்டும். மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டாலோ அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பதவிக்காலம் முடிந்தாலோ அவர் உடனடியாக தனது அலுவலகத்தை காலி செய்து தர  வேண்டும்.இவ்வாறு அந்த அவசர சட்டத்தில் கூறி உள்ளார்.தமிழக கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து, தமிழக சட்டத்துறை செயலாளர் சி.கோபி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: அரசியல் கட்சிகள் சார்பில் மாநகராட்சிகளுக்கு மேயர்கள், நகராட்சிகளுக்கு தலைவர்கள்,  பேரூராட்சிகளுக்கு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். கிராம பஞ்சாயத்துக்களுக்கு மட்டும் அரசியல் சார்பில்லாத வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அவர்கள் தலைவர்களை  தேர்ந்தெடுக்கப்படுப்பார்கள்.

இதுவரை இருந்து வந்த இந்த நடைமுறைகளில் கவுன்சிலர்களின் ஒத்துழைப்பு மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு கிடைக்காததால், மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளை சரியாக நிர்வகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  பல நேரங்களில் உள்ளாட்சி மன்ற கூட்டங்கள் இடையிலே நின்று போன சம்பவங்களும் உண்டு. மக்களுக்கு சேவை செய்யும் அடிப்படையிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.எனவே இந்த பிரச்னையில் கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மறைமுகமாக மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்க வகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு  வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களே மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை தேர்வு செய்வார்கள்.இதன்மூலம் உள்ளாட்சி மன்ற கூட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறும். பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்வு மறைமுகமாக நடத்த வேண்டும்  என்று கோரிக்கை மனு அரசுக்கு வந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவும் எதிர்த்துள்ளது. எனெனில், ஒரு  மேயர், தலைவர் பதவியைக் கூட கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். கவுன்சிலர் பதவிகளும் அவர்களுக்கு குறைவாகத்தான் கிடைக்கும். அதிமுகதான் அதிக இடங்களில் போட்டியிடும். கூட்டணிகள் போட்டியிடும் இடங்களில்  கூட அதிமுக போட்டி வேட்பாளர்கள் அல்லது அதிருப்தியாளர்கள் நிற்கும்நிலை வரும். அதனால் கிடைக்கும் ஒன்றிரண்டு சீட்டுகளில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் தலைவர் பதவிகளையாவது பெறலாம் என்ற  கூட்டணி கட்சிகள் திட்டமிட்டது. அதற்கு மொத்தமாக அதிமுக அல்வா கொடுத்து விட்டது. இதனால்தான் கூட்டணிக் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரை தேர்வுசெய்வார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  இது, ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்கள் தங்களுக்கு பிடித்த நபரை மேயராகவோ, நகராட்சி தலைவராகவோ, பேரூராட்சி தலைவராகவோ தேர்வுசெய்வார்கள். இது, அவர்களது உரிமை. ஆனால், தமிழக அரசின் இந்த நடவடிக்கை, மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும்  செயலாக அமைந்துள்ளது.இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் கூறினார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவே அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓராண்டில் மாற்றிய அதிமுக

2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு செய்தபோது, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் மறைமுக தேர்தல்தான் இருந்து வந்தது. பின்னர் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம்  சட்டப்பேரவையில் ஒரு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மறைமுக தேர்தலுக்குப் பதில், நேரடியாக மக்களே, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது ஓராண்டில் அந்த  சட்டம் மீண்டும் மாற்றப்பட்டு மறைமுக தேர்தல் கொண்டு வரப்பட்டுள்ளது.

* 15 மாநகராட்சி  மேயர், 121 நகராட்சி தலைவர், 528 பேரூராட்சி தலைவர்கள், முதல் கவுன்சில்  கூட்டத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* ஏற்கனவே துணை மேயர் மற்றும் துணை  தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

* அதேபோன்று இனி  மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

* இந்த தலைவர்கள் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் கவுன்சிலராக செயல்பட முடியாது.

* தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பதவிக்கு காலியிடம் வந்தால், புதிய தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்ய வேண்டும்.

Related Stories:

>