டிரைவர்-பெண் பயணி இடையே தகராறு: அரசு பஸ் திடீர் சிறைபிடிப்பு... ஈத்தாமொழி அருகே பரபரப்பு

ஈத்தாமொழி: ஈத்தாமொழி அருகே டிரைவர்-பயணி இடையே எழுந்த தகராறையடுத்து அரசு பஸ்சை அந்த பகுதி பொது மக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து இன்று காலை புத்தன்துறைக்கு தடம் எண் 38எச் அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை மாணிக்கம்  ஓட்டி வந்தார். புத்தன்துறையில் இருந்து மீண்டும் பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் வந்த பெண் ஒருவர் பஸ்சை நிறுத்துமாறு சைகை செய்தார். ஆனால் டிரைவர் அந்த பெண் நின்றிருந்த இடத்தையும் தாண்டி பஸ்சை நிறுத்தினார். உடனடியாக அந்த பெண்ணும் ஓடி வந்து பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும். இப்படி கண்ட இடங்களில் நின்று பஸ்சை நிறுத்தக்கூடாது என்று டிரைவர் அந்த பெண்ணை கண்டித்துள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து பேசியதாக தெரிகிறது.

இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் கீழே இறங்கி சென்றுவிட்டார். அதன்பிறகு பஸ் புறப்பட்டு நாகர்கோவில் சென்றது. பின்னர் மீண்டும் சுமார் 11 மணியளவில் புத்தன்துறைக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பெண் மற்றும் ஊர் மக்கள் பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்ததும் அரசு போக்குவரத்து கழக செட்டிக்குளம் கிளை மேலாளர் சுபாஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக அந்த தடத்தில் வேறு டிரைவர் அமர்த்தப்பட்டு பஸ் இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.

Related Stories: