பண்ருட்டி பேருந்து நிலையத்தில் குப்பைகளை தரம் பிரிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்: மாடுகள் திரிவதால் பயணிகள் கடும் அவதி

பண்ருட்டி: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் குப்பைகளை தரம் பிரிப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு ேநாய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களாக நகராட்சியினர் வெளியில் இருந்து குப்பைகளை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் குப்பைகளை கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் குப்பைகள் கொட்டும் இடம் அருகில் புறக்காவல் நிலையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் அரசு பேருந்து நேரக் காப்பாளர் அறை ஆகியவை உள்ளன. இதனால் இந்த இடத்தில் பேருந்துக்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காத்திருப்பார்கள். ஆனால் நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் கொட்டப்படும் குப்பைகளில் உணவு பொருட்கள் இருப்பதால் மாடுகள் அங்கு முற்றுகையிடுவது வாடிக்கையாகி வருகிறது. அவை உணவுபபொருட்களுடன் பிளாஸ்டிக் பைகளையும் உட்கொள்வதால் உடல்நலக்கோளாறு ஏற்படுகிறது. மாடுகள் நடமாட்டத்தால் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே பேருந்து நிலையத்தில் குப்பைகளை தரம் பிரிப்பதை கைவிட்டு உடனடியாக மாற்று இடத்தில் கொட்டி தரம் பிரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் நிலையத்தில் உலா வரும் மாடுகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: