இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சே: ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதை தொடர்ந்து நியமனம்

கொழும்பு: இலங்கை பிரதமராக, தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேயை, நியமித்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 16-ம் தேதி நடந்தது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில்  பல்வேறு  கட்சிகள்,  அமைப்புகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும், பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெறும் நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார்.

இந்நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையே, ராஜபக்சே தனது 74வது பிறந்தநாளையொட்டி அளித்த பேட்டியில், ‘‘புதிய அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட அதிபரும், அமைச்சர்களும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே, தேர்தல் மூலம் பொதுமக்கள்  அளித்த முடிவுக்கு மதிப்பளித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக பதவி விலக வேண்டும்,’’ என்றார். இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை நியமித்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அவர், விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: