ஒரே நாளில் 6 நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்: சந்தை மதிப்பு ரூ. 9.5 லட்சம் கோடி

மும்பை: முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததால் பிரிட்டிஷ் கச்சா எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட உலக அளவில் பெரும் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி அதன் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உலக அளவில் பல நிறுவனங்களுடன் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறார்.

சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது முதலே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில அந்த நிறுவனம் நேற்று மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியது. நேற்று பங்குச் சந்தைகளில் இந்நிறுவனத்தின் பங்குகள் விலை 3.52 சதவீதம் அளவுக்கு அதிகரித்ததால் ஒரு பங்கின் விலை, 1,509.80 ரூபாயாக உயர்ந்தது. இதையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 32 ஆயிரத்து, 525 கோடி ரூபாய் அதிகரித்து, 9.5 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த மாதம் இந்நிறுவனம் 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது. இந்நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டில் இதுவரை 34 சதவீதம் அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. இந்த புதிய சாதனையால் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் சந்தை மதிப்பில் 6 முன்னணி நிறுவனங்களை முந்தியுள்ளது பிரிட்டிஷ் எரிசக்தி நிறுவனம், சீனா பெட்ரோலியம் கம்பெனி உள்ளிட்ட 6 நிறுவங்களை விடவும் ரிலையன்ஸ் முன்னேறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 3-ல் இரண்டு பங்கு எரிசக்தி மூலம் வருகிறது. இரண்டாவதாக தொலைத்தொடர்பு, தொலைபேசி மூலம் லாபம் ஈட்டி வருகிறது.

Related Stories: