இந்தியா- வங்கதேசம் இடையேயான பகல்-இரவு ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம்: 4 நாட்களுக்கான டிக்கெட்டும் விற்று தீர்ந்தது

கொல்கத்தா: இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது ‘பிங்க்’ பந்து டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கான  பிரத்யேக பந்து தயாரிப்பு பணி உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்றது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துள்ளது. மேலும் முதல் 4 நாட்களுக்கான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் முழுமையாக விற்றுத்தீர்ந்துவிட்டது. வங்காளதேசம் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அந்தஸ்து பெற்றபோது, முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்துதான் விளையாடியது. தற்போது முதல் பிங்க் பால் போட்டியிலும் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் விரும்புகின்றன.

போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில் பிசிசிஐ-யின் தலைவரும், முன்னாள் கேப்டனும், கொல்கத்தா மண்ணின் மைந்தனுமான சவுரவ் கங்குலி நேற்று மும்பையில் கூறுகையில், கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. இந்தியாவின் மிகப்பெரிய மைதானத்தில் ஒன்றான ஈடன் கார்டனில் 67,000 பேர் பார்க்கலாம். கங்குலியின் கூற்றுபடி, 67,000 டிக்கெட்டுகளும் நேற்றுடன் விற்றுத் தீர்ந்ததால் புதியதாக டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. குழந்தைகளையும், ரசிகர்களையும் கவரும் வகையில் மைதானத்தில் வலம்வர உள்ள பிரமாண்ட பலூன் மனிதர்கள் ‘பிங்கு - டிங்கு’  நிகழ்வின் அதிகாரப்பூர்வ சின்னங்களான ‘பிங்கு-டிங்கு’ஐ கங்குலி வெளியிட்டார்.

Related Stories: