கூடங்குளம் அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய அணுசக்தி கழகத்திற்கு 2 வாரம் கெடு : உச்சநீதிமன்றம்

டெல்லி : கூடங்குளம் அணு உற்பத்தி மையத்தில் உள்ள அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய அணுசக்தி கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தமிழகத்தில் கூடங்குளம் அணு உற்பத்தி மையத்தால் பல தீங்குகள் விளையும் என அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர்ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

கால அவகாசம் கோரி வழக்கு இழுத்தடிப்பு

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “கூடங்குளம் அணு மின்நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாக்கும் விதமாக 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும். இதுபற்றிய திட்ட அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், “கூடங்குளம் அணுக்கழிவுகள் பாதுகாப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தயார் செய்து அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 4 வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய கடந்த ஜனவரி 2ம் தேதி உத்தரவிட்டனர்.

கோரிக்கை நிகாரிப்பு

இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய அணுசக்தி கழகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடங்குளம் அணுக்கழிவு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ,வழக்கை உடனடியாக விசாரித்து ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் அணுசக்தி கழகத்திற்கோ அல்லது மத்திய அரசுக்கோ யாருக்கும் கால அவகாசம் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

 இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ,தமிழகத்தில் இருக்கும் கூடங்குளம் அணு உற்பத்தி ஆலையின் கழிவுகளை பாதுகாப்பது தொடர்பாக மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும் என்ற இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்தனர்.இதில் அடுத்த 2 வாரத்தில் வழக்கு குறித்து விரிவான அறிக்கையை இந்திய அணுசக்தி கழகம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: