நாடாளுமன்றத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தத் திட்டம்: நாகாலாந்தில் 18 மணிநேரக் கடையடைப்பு

நாகாலாந்து: நாகாலாந்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கொஹிமா உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் 18 மணிநேர பந்த் அனுசரிக்கப்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா இம்முறை வடகிழக்கின் நாகாலாந்து உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவர உள்ள குடியுரிமை திருத்த மசோதாவின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்துக்கள்,ஜெயின்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மதத்தினர் ஆகியோர் ஆவணங்கள் இல்லாமல் வந்தால்கூட குடியுரிமை வழங்கப்படும். ஆனால் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது என்று மதரீதியாக மக்களைப் பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால் கடந்த முறை பாஜக அரசில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. எனினும் அசாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட என்ஆர்சி சட்டத்தால் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகாலாந்தில் 18 மணிநேரக் கடையடைப்புக்கு பழங்குடியினருக்கான வடகிழக்கு அமைப்பு என்.இ.எப்.ஐ.பி. மற்றும் சட்டவிரோத குடியேறியவர்களைத் தடுப்பதற்கான கூட்டுக் குழு ஜே.சி.பி.ஐ. அழைப்பு விடுத்திருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கடையடைப்பு இன்று மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது. மாநிலத்தில் வழக்கமாக இரவு தாமதமாக வரை திறந்திருக்கும் கடைகள் மாலை 6 மணிக்கு மூடப்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் வாகனங்களின் இயக்கம் சாதாரணமாக இருந்தது. எந்தவொரு பகுதியிலுருந்தும் எந்தவொரு அசம்பாவித சம்பவம் பற்றிய தகவல்களும் இல்லை. என்.இ.எப்.ஐ.பி. மற்றும் ஜே.சி.பி.ஐ. ஐத் தவிர பணி நிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய பல அமைப்புகள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கடையடைப்பு, வேலைநிறுத்தக் காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தன.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ள இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் நாட்டில் தங்கிய பின்னர் முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் குடியுரிமை வழங்கப்படும். இருப்பினும் வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்கள் இந்த நபர்களின் நுழைவு தங்கள் அடையாளத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று அஞ்சுகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு அறிமுகப்படுத்த உள்ள குடியுரிமை திருத்த மசோதா சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: