தமிழகத்தில் பருவமழை வழக்கத்தைவிட 9% குறைவாக பெய்துள்ளது : வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

சென்னை : தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், நெல்லை,  தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடத்தில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறினார்.

மேலும் புவியரசன் கூறியதாவது, தமிழகத்தில் பருவமழை வழக்கத்தைவிட 9% குறைவாக பெய்துள்ளது. அக். 1 முதல் சென்னையில் 50 செ.மீ. மழை கிடைக்க வேண்டிய நிலையில், 30 செ.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் 28,29 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடல் பகுதிக்கு சென்றதால் மழை குறைந்தது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செ.மீ. மழையும் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: