×

சாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் ?: மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

மதுரை : மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிப்பு

எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில், மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன் உட்பட 13 பேர் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம் என்பவர், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். அதில், 13 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் அரசாணையை தனக்கு வழங்க வேண்டுமென கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தண்டனையை, தமிழக அரசு எளிதாக கையாண்டு 13 பேரை விடுவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது. 13 பேர் விடுவிக்கப்பட்டதற்கான அரசாணை மற்றும் அனைத்து ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி, நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

இந்த மனு இன்று மீண்டும் அதே நீதிபதிகள் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி 13 பேர் விடுதலை அரசாணை, ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலும் இதே வழக்கில் தொடர்புடைய 3 பேர் கடந்த 2008ம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.இதையடுத்து 13 பேர் விடுதலைக்கான அரசாணை வெளியிடும் முன், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதா? மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்? சாதிய அடிப்படையில் கொலை நடந்தது என்பதை நிரூபிக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லையே ஏன் ? என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மேல்முறையீடு செய்யாததால் 13 பேருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தண்டனை வழங்கப்படாதது என்று வருத்தம் தெரிவித்தனர்.

அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு


இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் நீதிபதிகள் கூறியதாவது, 13 பேர் விடுதலைக்கு எதிராக இதே மனுதாரர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். அது தொடர்பாக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பொது மன்னிப்பு அடிப்படையில் 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்போது மனுதாரர் அரசாணையை எதிர்த்து, கூடுதல் ஆவணங்களுடன் திருத்தம் செய்யப்பட்ட மனுவை தாக்கல் செய்யலாம்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : Overtime, Tamil Nadu Government, Petition, Filing, Life Prisoners, Release
× RELATED ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு...