குருவாயூர் உள்ளிட்ட கோவில்களை போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தனிச்சட்டம்: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, பெண்கள் செல்ல தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள அரசு, ‘‘இளம் பெண்கள் சபரிமலை செல்ல விரும்பினால் செல்லலாம். ஆனால் அவர்களுக்கு தனியாக எந்த பாதுகாப்பும் அளிக்கப்படாது’’ என்று தெரிவித்தது.

இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கட்டமாக 23 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இளம் பெண்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வரை 45 வயதுக்கு குறைவான 319 இளம்பெண்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதில், ஆந்திராவில் இருந்து மட்டும் 160 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 2வதாக தமிழ்நாட்டில் இருந்து 139 இளம்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து 9, தெலங்கானாவில் இருந்து 8, ஒடிசாவில் இருந்து 3 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது உண்மையான கணக்கு அல்ல என்றும், சிலர் வயதை தவறாக குறிப்பிட வாய்ப்பு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், கேரளாவில் இருந்து ஒரு இளம்பெண் கூட தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருவாயூர் உள்ளிட்ட கோவில்களை போல சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நலனுக்காக தனிச்சட்டம் உருவாக்குங்கள் என்றும் ஜனவரி 3-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சபரிமலை செல்லும் பக்தர்களை நிலக்கல் முதல் பம்பை வரை அழைத்துச்செல்ல இலகுரக வாகனங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.    

Related Stories:

>