×

அணையிலிருந்து திறந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு வராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியான பழைய ஆயக்கட்டுக்கு நேரடி பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டும் வந்து சேராததால் விவசாயிகள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ஏ.எம்.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் பழனிக்குமார், மாநில பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பொன்னம்பலம், பொன்னுச்சாமி, செல்வக்குமார், மொக்கராசு, போஸ், ரமேஷ், தர்மலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மஞ்சளாறு அணையின் கொள்ளளவு 57 அடி. அதில் தற்போது 55 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. தமிழக முதல்வர் உத்தரவுப்படி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டும் தண்ணீர் கடைமடைப் பகுதியான குன்னுவாரன்கோட்டை ஆலங்குளம் பகுதி விவசாயிகளின் நேரடி பாசனத்திற்கு வந்து சேரவில்லை. இதேநிலை கடந்து ஐந்து வருட காலமாக நீடிக்கிறது. இதனால் நெல் போன்ற விவசாயங்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அதை கண்டித்து வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, கரட்டுப்பட்டி, உச்சப்பட்டி, ஆலங்குளம் பகுதி விவசாயிகள் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார். பின்னர் கடை, கடையாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி கடைக்கு வந்த விவசாயிகளிடம் விவசாயிகளின் நிலையை விளக்கி பிரச்சாரம் செய்தனர்.

Tags : elections ,open water stall area , Dam
× RELATED மேட்டூர் அணை 100.78 அடியாக உள்ளது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி