×

பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பள்ளி மற்றும் கல்லூரி அருகேயுள்ள கடைகளில், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், உணவு பாதுகாப்புத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் செயல்படும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தற்போது கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் மீண்டும் புகையிலை விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சுப்புராஜ், செல்வபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடுமலை ரோடு மற்றும் வால்பாறை ரோடு, மீன்கரை  ரோடு, கோவை ரோடு, பல்லடம்  ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, மளிகைக்கடை, டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சுமார் 36 கடைகளில் தடை செய்யப்பட்ட 21 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட விதிமீறி புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீசை, அதிகாரிகள் வழங்கினர். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் மாத்திரை போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது ஆய்வு பணி மேற்கொண்டாலும், தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : school ,College , School, College
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி