×

குடந்தையில் போதிய அடிப்படை வசதி செய்யாததால் சேறும் சகதியாக மாறிவரும் அரசு போக்குவரத்து கழக பணிமனை

கும்பகோணம்: போதிய அடிப்படை வசதி செய்து தராததால் கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணி சேறும் சகதியுமாக மாறி வருகிறது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதால் காலி செய்து விட்டு கும்பகோணம் ஒன்றியம் அசூர் ஊராட்சியில் 20 ஆயிரம் சதுர அடியில் 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் அந்த ஊராட்சியில் உள்ள பள்ளிக்கு உரிய இடமாகும்.

இந்த இடத்துக்கு விரைவு போக்குவரத்து கழகம் வந்து 3 ஆண்டுகளான நிலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. சாலையும் அமைக்கவில்லை. இதனால் பேருந்துகள் செல்லும் இடமெல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பணிமனைக்குள் சென்ற பேருந்து அங்கிருந்த பள்ளத்தில் மாட்டி கொண்டது. அந்த பேருந்தை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதேபோல் பேருந்துகளை கழுவும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மழைநீருடன் பேருந்துகளை கழுவும் நீரும் கலந்து நிற்பதால் பணிமனையே கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள ஓய்வறை மற்றும் சுகாதார வளாகங்கள் இருந்தும் போதுமான வசதி இல்லாததால் டிரைவர், கண்டக்டர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் தொழிலாளர்களால் ஓய்வெடுக்க முடிவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போதைய எம்பி பாரதிமோகன், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு நிதி ஒதுக்கி சீரமைப்பேன் என்றார். ஆனால் சொற்பளவில் நிதியளித்து விட்டு சென்றவர், மீதமுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்க வில்லை என்பது வேதனையான விஷயமாகும்.

அரசு விரைவு போக்குவரத்து பணிமனை கும்பகோணத்தில் இருந்து 7 கிலோ மீட்டா் தூரத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் சென்றுவர சிரமமாக உள்ளது. அதை நகரத்திற்குள்ளே ஒரு இடத்தில் டெப்போவை அமைத்தால் சுலபமாக இருக்கும்.
எனவே மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து விரைவு கழகத்தை கும்பகோணம் நகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது தற்போதுள்ள விரைவு போக்குவரத்து கழக பணிமனையை சீர்படுத்தி சுகாதாரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : infrastructure facilities ,state transport corporation workshop , Government transport
× RELATED சுற்றுலா துறை அதிகாரி நேரில் ஆய்வு...