அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி எம்.எல்.ஏ., அதிகாரிகள் முற்றுகை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் நடந்த வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜையின்போது, அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி, எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்குட்பட்ட விக்னேஷ்வரா நகரில், மாநகராட்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், தார்தளம் மற்றும் மறு தார்தளம் அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பூமிபூஜை நேற்று காலை நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதேபோல் 19வது வார்டில் ரூ.70 லட்சத்திலும், 24வது வார்டில் ரூ.59 லட்சம் மதிப்பிலும், 27வது வார்டில் ரூ.40 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலும், 30வது வார்டில் ரூ.68 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 38 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி பொறியாளர் ஆறுமுகம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், பூலுவப்பட்டி பாலு, பாலசுப்பிரமணியம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 19வது வார்டுக்குட்பட்ட விக்னேஷ்வராநகரில் பூமிபூஜை முடிந்த உடன் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் விக்னேஷ்வராநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி எம்.எல்.ஏ. விஜயகுமார், உதவி கமிஷனர் செல்வநாயகம் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.  அப்போது அவர்கள் கூறியதாவது, ‘‘இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.

இதேபோல் முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் வீதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து எம்.எல்.ஏ. விஜயகுமார் பொதுமக்களுடன் நடந்து சென்று ரோடு மற்றும் சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லாத அனைத்து இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இதையடுத்து  பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: