×

குழந்தைகள் நலனை பாதுகாப்போம்: இன்று (நவ.20) சர்வதேச குழந்தைகள் தினம்

இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை, குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். சர்வதேச அளவில் யூனிசெப் எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நவ.20ம் தேதி உலக குழந்தைகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

அன்றாடம் செய்திகளை நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். குழந்தைகள் மீதான பாலியல் உள்ளிட்ட வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குழந்தைகள் நலனை நாம் கட்டாயம் பேணிக் காக்க வேண்டும். கூட்டு முயற்சி மூலம் இதை நிறைவேற்ற முடியும். எனவேதான், ஒவ்வொரு ஆண்டும் நவ.19ம் தேதியை பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாக அறிவித்த யூனிசெப் நிறுவனம், அடுத்த நாளான நவ.20ம் தேதியை குழந்தைகள் தினமாக அறிவித்தது. குறிப்பாக, நீல நிறத்தை குழந்தைகளின் உரிமைகளை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது. யூனிசெப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். உலகம் முழுவதும் 85 நாடுகளில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் நவ.14, பல்கேரியாவில் ஜூன் 1, டொக்லியு தீவுகளில் அக்டோபர் 2ம் ஞாயிறு, மெக்ஸிகோவில் ஏப்.30ம் தேதி, சிலியில் ஆகஸ்ட் 2ம் ஞாயிறன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஜப்பானை பொறுத்தவரை 2 குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 3 அன்று பெண் குழந்தைகளுக்காகவும் மே 5, ஆண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் தினத்தன்று மக்கள் ஹெய்ன் வகை பொம்மைகளால் வீடுகளை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். ஆண் குழந்தைகள் தினத்தன்று மீன் வடிவப் பட்டங்களை பறக்க விட்டு கொண்டாடுகின்றனர்.

மற்ற தினங்களை விட குழந்தைகள் தினம் முக்கியமாக கருத வேண்டுமென யூனிசெப் தெரிவித்துள்ளது. குழந்தைகள்தான் வாழ்வின் முதல் படி. ஆகையால், அவர்களுக்கு கல்வியோடு அறிவுத்திறனை மேம்படுத்தும் போட்டிகளை நடத்த வேண்டும். விளையாட்டு அல்லது படிப்பில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். தந்தையோ, தாயோ கட்டாயம் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் தினமும் மனம் விட்டு பேச வேண்டும். எக்காரணமும் கொண்டு அவர்களின் மனம் புண்படும்படி பேசக்கூடாது.

வாரம் ஒருநாள் அவர்களோடு வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும். அருகே உள்ள நூலகங்களுக்கு அழைத்து செல்லலாம். மேலும், அவர்கள் வாழ்க்கையை துணிவோடு எதிர்கொள்ள வீர வரலாற்று சம்பவங்கள், தன்னம்பிக்கை கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு முன் பெற்றோர் கடுமையாக சண்டையிடுவது கூடாது. இது அவர்களது மனதில் வன்முறை எண்ணத்தை வளர்க்கும். குடும்ப வாழ்வின் சிக்கல்கள், சிரமங்களை அவர்களிடம் பக்குவமாக தெரியப்படுத்த வேண்டும். மற்ற பிள்ளைகளுடன் எப்போதும் ஒப்பீடு செய்யவே கூடாது. இது அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து விடும்.

அது மட்டுமல்ல... தான் வாழ்க்கையில் சாதிக்க நினைத்ததை பிள்ளைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. இது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களது சிந்தனையையும் கெடுத்து விடும்.
குழந்தைகள் பூ போன்றவர்கள். அவர்களை மெல்லிய மனதோடு அணுகுங்கள். அவர்களின் மழலை சிரிப்பில் நாம் மனக்கஷ்டங்களை மறக்கலாம். குழந்தைகளை நேசிப்போம்.

Tags : International Children's Day , International Children's Day
× RELATED மும்பை கடற்படை தளத்தில் 20...