×

சம்பளம் வழங்காததால் குருக்கள் வரவில்லை: பூட்டிக்கிடக்கும் பழமை வாய்ந்த திருசிற்ற நேமம் சிவன் கோயில்

திருத்துறைப்பூண்டி: கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருசிற்றநேமம் சிவன் கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற போது கோயில் பூட்டி கிடந்ததை பார்த்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். திருத்துறைப்பூண்டி எழிலூர் ஊராட்சி திருசிற்றநேமம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு 250 ஏக்கர் சொந்தமாக நிலம் உள்ளது. குத்தகையும் முழுமையாக வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சிவன் கோயிலுக்கு எழிலூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து சிவனை வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கார்த்திகை சோமவாரபூஜைக்கு சென்ற கிராம மக்கள் கோயில் பூட்டி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

இது குறித்து கிராம கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராமமக்கள் கூறுகையில், இந்த கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. நாள்தோறும் கோயிலில் 4 காலபூஜை நடைபெற்று வந்தது. பின்னர் அது ஒரு காலபூஜையாக செய்து வந்தனர்.இங்கு பூஜை வேலைகளை பார்த்து வந்த குருக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சம்பளம் வழங்கி வந்தது. கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்காததால் குருக்கள் கோயிலுக்கு வருவது இல்லை. ஏற்கெனவேஇங்கு வேலை பார்த்த குருக்களுக்கு பலமாதசம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த கோயிலுக்கு 250 ஏக்கர் சாகுபடி நிலம் சித்தமல்லி, நேமம் பகுதிகளில் உள்ளது. இதற்கான குத்தகையை முழுமையாக அனைவரும் ஆண்டு தோறும் செலுத்தி வருவதாகவும் ஆனால் ஒருகால பூஜை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கோயில் பூட்டியே கிடக்கிறது. நேற்று முன்தினம் திங்கள்கிழமை சோமவாரம் என்பதால் கிராமத்தின் சார்பில் ரூ.5 ஆயிரத்திற்கு பூஜை சாமான்களை வாங்கி கொண்டு சென்ற போதும் கோயில் பூட்டி கிடந்தது. இதனால் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை திறந்து வழக்கம் போல் பூஜை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Tags : priests ,Shiva Temple , The Shiva Temple
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...