×

கடற்கரை பகுதியில் டன் கணக்கில் பரவி கிடக்கும் பாலிதீன் கழிவுப் பொருட்கள்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தென்கடற்கரை பகுதி முழுவதும் கடலோர சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக், பாலிதீன், கண்ணாடி கழிவுகள் பரவிக் கிடக்கிறது. இதனை சுத்தப்படுத்தி கடல் மாசு பாதிப்படைவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் தீவைச்சுற்றிலும் வெண் மணல் பரப்பும், பாறைகளை கொண்ட கடற்கரை அமைந்துள்ளது. தீவின் வடக்கு பகுதி முழுவதும் சுண்ணாம்பு பாறைகளும், தென்பகுதி முழுவதும் மணல் பரப்பாகவும் விளங்கும் கடற்கரையோரத்தில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்படும் பலவிதமான பொருட்கள் பல இடங்களில் பரவிக் கிடக்கிறது. ராமேஸ்வரம் கடற்கரையை தூய்மை செய்கிறோம் எனக்கூறி இங்கு வரும் பல அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்தினால் அன்றாடம் சுத்தம் செய்யப்படும் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் அரிச்சல்முனை கடற்கரையை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால் தீவைச்சுற்றிலும் கடலோரத்தில் பரவிக் கிடக்கும் டன் கணக்கிலான கழிவுப் பொருட்களால் கடல்சூழல் மாசடைவதுடன் கடலோரப் பகுதியும் குப்பைகள் நிறைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பகுதிகளுக்கு இவர்கள் செல்வதில்லை. கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பாதுகாப்புத் துறை, வனத்துறை, துறைமுகத்துறை அதிகாரிகளும் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.

தீவைச்சுற்றிலும் மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ள இடங்களில் கடலோரத்தில் மீனவர்களால் கொட்டப்படும் மீன் கழிவுகள் மற்றும் நண்டு, மீன் கம்பெனிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் போன்றவற்றினால் கடலும், கரையும் மாசடைந்து வருகிறது. இதனை முழுமையாக தடுப்பதற்கு மீனவர்களும் முன்வருவதில்லை. அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், சுகாதாரமும் கெட்டு வருகிறது.

இந்நிலையில் தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மணிதர்களால் பயன்படுத்தப்பட்டு பின்னர் வீசயெறிப்படும் பலவகையான பொருட்களும் கடலோரத்தில் குவியலாக பரவிக்கிடக்கிறது. தற்போது அடித்து வரும் காற்றின் நிலை மாறும்போது கடலோரத்தில் கிடக்கும் இக்கழிவுகள் அனைத்தும் மன்னார் வளைகுடா கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு விடும் நிலை உள்ளது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள், கடல்தாவரங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு அழிவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தனுஷ்கோடி தெற்கு கடலோரப் பகுதியில் கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றவும், ராமேஸ்வரம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக கடற்கரையில் குவிந்திருக்கும் கழிவுகளை அகற்றியும் கடல் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : areas , Polythene
× RELATED திருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன்...