நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் பயணிகளை அச்சுறுத்தும் மனநோயாளிகள்

நாகை: நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றிதிரியும் மன நோயாளிகளை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர். நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், தூத்துக்குடி என்று தொலை தூரங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதே போல் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் என்று ஆன்மீன தலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் எந்த நேரமும் நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நகர பஸ்கள் நிற்கும் இடத்திலும், புற நகர பஸ்கள் நிற்கும் இடத்திலும் பயணிகள் அமருவதற்காக போடப்பட்டுள்ள இருக்கைளில் மனநோயாளிகள் இருக்கின்றனர்.

Advertising
Advertising

பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள உணவகங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகளிடம் இருந்தும் சாப்பாடுகளை வாங்கி இருக்கையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். தாங்கள் சாப்பிட்ட இலை கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டு அப்படியே படுத்து விடுகின்றனர். சில நேரங்களில் இயற்கை உபாதைகளை அங்கேயே கழித்துவிடுகின்றனர். இதனால் பஸ்ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.

மேலும் பஸ்கள் வருவதற்கு எவ்வளவு நேரமானாலும் பயணிகள் இருக்கையில் அமர அச்சம் அடைந்து கொண்டு கால்கடுக்க நின்று கொண்டே இருக்கிறார்கள். வரலாற்று புகழ் பெற்ற வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இரண்டு சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகள் நாகை பஸ்ஸ்டாண்ட் வழியாகவே செல்ல வேண்டும். அப்படி இருக்கும் போது நாகை பஸ்ஸ்டாண்டை பயணிகள் கவரும் வகையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு மனநோயாளிகள் சுற்றிதிரியும் இடமாக இருப்பது வேதனை தருகிறது. இங்கு தங்கியிருக்கும் மன நோயாளிகளின் சிலர் வெளியூர்களில் இருந்து வந்து புரியாத மொழியில் பேசி வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ்ஸ்டாண்ட் மற்றும் நகர பகுதியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: