கூடங்குளம் அணுமின் கழிவுகள் பூமிக்கடியில் 15 மீ. ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். : மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி : கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது என்று மத்திய அரசு மக்களவையில் உறுதி அளித்துள்ளது. திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் மக்களவையில் 3ம் நாள் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த விளக்கம் பின்வருமாறு,

*திமுக எம்.பி ஞானதிரவியம் கேள்வி : கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகிறது?

இணையமைச்சர் ஜிதேந்திர சிங்  பதில் : கூடங்குளத்தில் அணுக்கழிவை அகற்றுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் அவர் கூறியதாவது, கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பூமிக்கடியில் ஆழத்தில் தரமான முறையில் சேமிக்கப்படுகின்றன. அணுக்கழிவுகளை எந்த இடத்தில் சேமித்து வைக்க உள்ளோம் என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக கூற முடியாது. அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். சேமிக்கப்பட்டுள்ள கழிவுகள் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் மீண்டும் உபயோகிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வேறு அணுமின் நிலையங்களின் கழிவுகள் கூடங்குளத்தில் சேகரித்து வைக்கப்படுவதில்லை இவ்வாறு அவர் கூறினார்.

*திமுக எம்.பி ஞானதிரவியம் கேள்வி :  கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளின் ஹேக்கர்கள் ஊடுருவியது உண்மையா ?

இணையமைச்சர் ஜிதேந்திர சிங்  பதில் : அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாக பிரிவில் இணையத்தளத்துடன் இணைந்த கணினிகளில் மட்டுமே ஹேக்கர்கள் புகுந்தன. அணு உலையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய கணினிகளில் ஹேக்கர்கள் நுழையவில்லை. அணு உலைகளை கட்டுப்படுத்த கூடிய கணினிகளில் ஹேக்கர்கள் ஊடுருவாததால் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து இல்லை. அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லை. கூடங்குளம் அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது.மற்ற நாடுகளை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது.இணைய தாக்குதல் ஏற்படும்போது அவை அணு உலை பகுதிக்கு சென்றுவிடாமல் தடுக்க வழிமுறைகள் உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நிலநடுக்க பாதிப்பு இல்லாத இடத்தில் தான் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது என்றும்  நிலநடுக்க பகுதியான இந்தோனேஷியாவில் இருந்து 13 ஆயிரம் கிமீ தொலைவில் உள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம் என்றும் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>