×

பணியிட மாறுதல் வழங்கக்கோரி தலைமையாசிரியை தரையில் படுத்து தர்ணா

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைமையாசிரியை தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் உள்ள ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பணி மாறுதலுக்கு 120 பேரும், பதவி உயர்வுக்கு 29 பேரும் விண்ணப்பித்திருந்தனர். நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை இந்திரா வந்திருந்தார். இவர் இப்பள்ளியில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.

இவர், தனக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டுமென விண்ணப்பித்திருந்தார். அவருக்கு பணியிட மாறுதல் வழங்க மறுத்ததாக கூறி, திடீரென தலைமையாசிரியை இந்திரா கலந்தாய்வு நடந்த அறையின் தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்திய பின் தர்ணாவை கைவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து இந்திரா கூறுகையில், ‘‘நான் பணியாற்றும் பள்ளியில் 2 குழந்தைகள் மட்டுமே 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்களும் தினந்தோறும் பள்ளிக்கு வருவதில்லை. அதனால் என்னை பணியிடம் மாற்றுங்கள் என்று எத்தனையோ முறை கூறியும், பணியிடம் மாற்றாமல் இழுத்தடிப்பு செய்து வந்தனர்.

நேற்றைய கலந்தாய்வு கூட்டத்திலாவது பணியிடம் மாற்றம் செய்வார்கள் என்று நம்பி வந்தேன். தரவில்லை. இதுகுறித்து கேட்டால் பணியிட மாறுதலுக்கு மூன்று வருடம் முடிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் வழங்க முடியும் என்று அலுவலர்கள் கூறுகின்றனர். கடந்த மே மாதத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. அன்று எனக்கு மூன்று வருடம் ஆகவில்லை. ஆனால் 6 மாதங்கள் கழித்து கலந்தாய்வு நடந்துள்ளது. தற்போது எனக்கு மூன்று வருடம் முடிந்து ஒன்றரை மாதம் ஆகிறது. அப்படியிருந்தும் எனக்கு பணியிட மாறுதல் தர மறுக்கின்றனர்’’ என்றார்.

Tags : Workplace Transition Provider Darna , Darna
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு