காட்பாடி கிளித்தான்பட்டறை ரேஷன் கடையில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை

வேலூர்: காட்பாடி கிளித்தான்பட்டறை ரேஷன் கடையில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான உணவுப் பொருட்களில் வண்டு, புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி கிளித்தான்பட்டறையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக அப்பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான உணவுப் பொருட்களை வாங்க அப்பகுதி மக்கள் நேற்று காலை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றனர். அப்போது ரேஷன் கடையில் இருந்த ஊழியர் ரவை, மைதா உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் தான் ரசீது போட்டு அரிசி, பருப்பு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, பொதுமக்கள் கூடுதல் பணம் செலுத்தி ரவை, கோதுமை, சேமியா உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரம் கழிந்து சமைப்பதற்காக ரவை பாக்கெட்டை பிரித்து பார்த்தனர். அப்போது, ரவை பாக்கெட்டில் வண்டு, புழு ஆகியவை இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வெளியே கொண்டு வந்து அக்கம், பக்கம் இருந்த பெண்களிடம் கூறினர். இதனை அறிந்த மற்ற பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ள ரவை, மைதா பாக்கெட்களை பிரித்து பார்த்தபோது அதிலும் வண்டு, புழுக்கள் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ரவை பாக்கெட் மீது தயாரிப்பு தேதியை பார்த்தபோது அவை காலாவதியான நிலையில் இருந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ரேஷன் கடை ஊழியரான ரவியிடம் சென்று முறையிட்டனர். அப்போது, ரேஷன் கடை ஊழியர் இந்த ஒருமுறை தவறு நடந்துவிட்டது. அடுத்தமுறை இதுபோன்று தவறுகள் ஏற்படாது. காலாவதியான உணவு பொருட்களை அழித்துவிடுகிறோம் என்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து ரேஷன் கடை ஊழியர் காலாவதியான ரவை, மைதா, சேமியா பாக்கெட்களை வாங்கி ரேஷன் கடையில் வைத்து கதவை பூட்டிவிட்டு அவசரம், அவசரமாக கிளம்பிச் சென்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ரேஷன் கடையில் விற்கப்படும் ரவை, மைதா, சேமியா பாக்கெட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். பொதுமக்களுக்கு நேற்று வழங்கப்பட்ட ரவை, மைதா, சேமியா பாக்கெட்களில் வண்டு, புழு பூச்சிகள் இருந்தது. ஒவ்வொருவரும் ₹60 செலவு செய்து வாங்கிய ரவை, மைதா, சேமியா பொருட்கள் அனைத்தும் வீணாகிவிட்டது. எனவே, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்களின் தரத்தை வட்ட வழங்கல் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories:

>