திருக்கார்த்திகை தீபவிழாவையொட்டி கலைநயத்துடன் தயாராகும் அகல்விளக்குகள்

களக்காடு: திருக்கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு கலைநயத்துடன் அகல்  விளக்குகள் தயார் செய்யும் பணி, களக்காடு பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இங்கு தயார்  செய்யப்படும் விளக்குகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்துக்களின்  முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபவிழா, வருகிற டிச.10ம்  தேதி கொண்டாடப்படுகிறது. ஒளிமயமான இறைவனின் அருளை பெற வேண்டி கார்த்திகை  நாளில் வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம்.

இதேபோல்  கோயில்களிலும் பக்தர்கள், புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள்.  இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மண்ணால் ஆன அகல்விளக்குகள்  தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. நெல்லை மாவட்டம்,  களக்காடு அருகே உள்ள மாவடியிலும் அகல்விளக்குகள் தயார் செய்யும் பணிகள்  முழு வீச்சில் நடந்து வருகிறது. மாவடியை சேர்ந்தவர் ஆறுமுகநம்பி (67). இவர்  தலைமுறை, தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரிடம் 10க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உணவருந்தும் தட்டு,  பானை, அடுப்பு, டம்ளர், மண்ணால் ஆன குளிர்சாதன பெட்டி, ஆப்பத்தட்டு, இட்லி  கொப்பரை மற்றும் சமையலுக்கு தேவையான உபகரணங்கள், கண்களை கவரும் வகையில்  மண்ணினால் கலைநயத்துடன் வடிவமைத்து கொடுக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள்  நிறைந்த இவைகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது  திருக்கார்த்திகை தீபவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு கலைநயத்துடன், பழமைமாறாத வண்ணம் மண்ணால் ஆன விளக்குகள் தயார் செய்யும் பணிகள் களைகட்டி உள்ளது. தற்போது விளக்குகள் வடிவமைப்பதில் இயந்திரங்களும்  பயன்படுத்தப்படுகின்றன. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை  பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான  விளக்குகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. 80 பைசா முதல் ரூ.25 வரை  தரம் வாரியாக விளக்குகள் விற்பனைக்கு உள்ளன.

புதிதாக மகாலெட்சுமி  விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் ரூ.25 முதல் ரூ.50  வரை விற்கப்படுகிறது. இந்த விளக்கில் எண்ணெய் ஊற்ற ஒரு துவாரம் உள்ளது.  எண்ணெய் ஊற்றிய பின் அதனை தலை குப்புற கவிழ்த்தாலும் எண்ணெய் வெளியே  வராது என்பது இதன் சிறப்பம்சமாகும். இதேபோல் விநாயகர் விளக்குகள் ரூ.10  முதல் ரூ.50 வரை விற்பனைக்கு உள்ளன.

இந்த விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி,  குமரி, மதுரை, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும்  விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா,  புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி  செய்யப்படுகிறது. திருக்கார்த்திகை சீசன் என்பதால் விளக்குகள் விற்பனையும்  சூடுபிடித்துள்ளது. இந்த சீசனில் மட்டும் கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Related Stories: