×

எப்போது என்றெல்லாம் சொல்ல முடியாது: தேவைப்பட்டால் ரஜினியும் நானும் இணைவோம்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: நானும், ரஜினியும் இணைவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கமல் 60:

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும்  திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம்  சூட்டினார். கமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது. நட்பு எப்போதும் போல் தொடரும் என்றார்.

கமல்ஹாசன் பேட்டி:

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிஷாவிலுள்ள நாட்டின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகமான செஞ்சூரியன் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக ஒடிஷா சென்ற கமல்ஹாசன் நிகழ்வை முடித்துவிட்டு புவனேஸ்வரில் இருந்து தனி விமானத்தில் நேற்று மாலை 6.15 மணிக்கு சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நானும், ரஜினிகாந்தும் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏன் என்றால் கடந்த 44 ஆண்டுகளாக நாங்கள் இணைந்து தான் பயணித்து கொண்டிருக்கிறோம். அரசியலில் இணைய வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக இணைவோம். தற்போது வேலை தான் முக்கியம். பேசிக்கொண்டிருப்பதால் பலன் கிடைக்காது. நாங்கள் அரசியலில் சேர்ந்து பயணிப்பது என்பது தமிழகத்தின் மேம்பாட்டுக்காக பயணிக்க வேண்டிய நிலை வந்தால் நிச்சயம் பயணிப்போம். நாங்கள் சேர்ந்து பயணிக்கும் போது எங்கள் இருவருடைய கொள்கைகள் ஒத்து போகுமா என்பது பற்றி எல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம். ஏன் என்றால் அதற்கு நேரம் இருக்கிறது. இப்போது அதைப்பற்றி பேச வேண்டியது இல்லை என்றார்.

ரஜினிகாந்த் பேட்டி:

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது இன்று வழங்கப்படுகிறது. இதற்காக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா சென்றார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடிகர் கமல்ஹாசன் சற்று முன்பு அளித்த பேட்டியில் அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என்றார்.

ரஜினியுடன் இணைவோம்: கமல் உறுதி

செஞ்சூரியன் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பேசிய கமல்ஹாசன், என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும் என்று பேசினார். என்னுடைய உழைப்பிற்கு இனிவரும் காலங்களில் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் ரஜினியும் நானும் இணைவோம்; ரஜினி உடன் இணையும் தேதி எப்போது என்றெல்லாம் சொல்ல முடியாது என்றார்.  

எங்கள் நட்பைவிட முக்கியமான செய்தி தமிழகத்தின் நலன் என்பது தான் என்றும் ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறினார். ரஜினி - கமல் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பது என் விருப்பம் என நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்:


கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்கப்பட்டது. மேலும், அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.    


Tags : Kamal Haasan ,Rajni , Can't tell when the date is: Rajni and I will join if needed: Kamal Haasan
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...