நடப்பு நிதியாண்டில் கணக்கில் வராமல் கைப்பற்றியதில் 43.22% 2000 ரூபாய் நோட்டுகள் தான்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்ட பணங்களில், கிட்டத்தட்ட பாதியளவு 2000 ரூபாய் நோட்டுகளே என்பது தெரியவந்துள்ளது.

2000 ரூபாய் அறிமுகம்:

உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கும், சட்ட விரோத செயலுக்கும் மூலக்காரணமாக இருப்பது கருப்பு பணம் தான். இதனை ஒழிக்க பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ம்  தேதி அறிவித்தார். 1000 மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அப்படித்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் புதிய வடிவங்களில், புதிய வண்ணங்களில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. பயங்கரவாதிகளுக்கு  நிதிஉதவி கிடைப்பதை தடுக்கவும், கருப்புப்பணம் பதுக்கலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

வருமான வரித்துறை தகவல்:

வருமான வரித்துறையில் சமீபத்திய தகவலின்படி, நடப்பு நிதியாண்டில் கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்ட பணங்களில், கிட்டத்தட்ட பாதியளவு உயர்மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளே என்பது தெரியவந்துள்ளது. மார்ச்,2019 நிலவுரப்படி  நாட்டில் மொத்தமாக 3,291 மில்லியன் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 6,582 பில்லியன் ஆகும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்:

இந்நிலையில், மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனுவில், கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய்க்கும் மேலான பணங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின்  சதவிகிதம் கடந்த 2017-18 நிதியாண்டில் 67.91%, 2018-19 நிதியாண்டில் 65.93 சதவிகிதமாக இருந்தது. அதேபோல இந்த நிதியாண்டில் தற்போது வரை பிடிபட்டுள்ள கணக்கில் வராத 5 கோடி ரூபாய்க்கு மேலான பணத்தில் 43.22 சதவிகிதம் 2000  ரூபாய் நோட்டுகளாக உள்ளது. எனினும் கணக்கில் வராத 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபடும் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் அச்சிடுதல் நிறுத்தம்:

இதற்கிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ரிசர்வ் வங்கி அதை மறுத்தது. இதுபற்றி உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஆங்கில நாளிதழ்  ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தது. அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்தது. அதில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

கடந்த 2016-17ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது 3,542.991 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன. 2017-2018ம் ஆண்டு 111.507 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன. 2018-2019ம் ஆண்டு 46.690 கோடி  எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. ஆனால் 2019-20ம் நிதி ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற மத்திய அரசுக்கு முன்னாள் பொருளாதார விவகாரங்கள் செயலாளர் எஸ்.சி.கார்க், சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனை தெரிவித்திருந்தார். அதற்கு அவர்  அதிகப்பட்சமாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதைவிட பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அதிகம் எனச் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடதக்கது.

Related Stories: