×

பெரும்பான்மை, வலிமையான அரசாங்கம்: டிசம்பர் மாதத்திற்கு முன்பு மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்போம்: சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி

டெல்லி: மகாராஷ்ராவில் டிசம்பர் மாதத்திற்குள் ஆட்சியமைப்பபோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்:

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியை  விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை.

இதையடுத்து சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி  விதித்த நிபந்தனையால், அந்தக் கட்சியின் சார்பில் மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான விரிசல் அதிகமானது.

ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து அதன்படி நடக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தியை நேற்று முன்தினம் சரத் பவார் சந்தித்தார்.

சரத் பவார் பேட்டி:

இது தொடர்பாக சரத் பவார் நிருபர்களிடம் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா? தெரிந்துதான் கேட்கிறீர்களா எனக் கேட்டார். அதற்கு நிருபர்கள்  என்சிபியுடன் சிவசேனா பேச்சு நடத்துவது உண்மையில்லையா என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம்.

அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம் என்று தெரிவித்தார். சிவசேனா-என்சிபியுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று கூறிவருகிறார்களே என்று கேட்டனர். அதற்கு சரத்  பவார் மிகவும் கிண்டலாக அப்படியா எனக் கேட்டவாறு நகர்ந்து சென்றார். இன்று மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் சந்திக்கவுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் ராவத் பேட்டி:


மகாராஷ்டிரத்தில் விரைவில் சிவசேனா தலைமையிலான அரசு அமையும் என்று,அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று தெரிவித்தார். இன்று பேட்டியளித்த சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்காக நடைமுறை இன்னும் 5-6 நாட்களில் நிறைவடையும், டிசம்பர் மாதத்திற்கு முன்பு மகாராஷ்டிராவில் பெரும்பான்மையான மற்றும் வலுமையான அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் இதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.


சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்:

இந்த நிலையில், வரும் 22ம் தேதி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே கூட்டியுள்ளார். இது குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று மாலை கூறுகையில், ‘‘கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காகவும், மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்காகவும் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு அவர்கள் மத்தியில் உத்தவ் தாக்கரே உரையாற்றுவார்’’ என்றார். சிவசேனாவுக்கு ஆதரவு தரும் விஷயத்தில் தேசியவாத காங்கிரஸ் மழுப்பலான பதில் அளித்து வருவதால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags : Government ,Sanjay Rawat ,Maharashtra ,Shiv Sena , Majority, Strong Government: Maharashtra to rule before December: Interview with Shiv Sena's Sanjay Rawat
× RELATED 2014க்கு முன் இருந்த நாட்கள் போதும்...