காஞ்சிபுரத்தில் அற்புத, நுட்ப வேலைப்பாடு கொண்ட பெண் நெசவாளருக்கு தேசிய விருது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அற்புத, நுட்ப வேலைப்பாடு கொண்ட பெண் நெசவாளருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை 2014ம் ஆண்டு முதல் சிறந்த கைத்தறி துணிகளை நெய்ந்த நெசவாளர்களுக்கு தேசிய விருது மற்றும் சான்றுதழ்களை வழங்கி கவுரவித்து வருகிறது. தொடர்ந்து, 2017ம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு இந்திய அளவில்11 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த கீதா என்ற நெசவாளியும் ஒருவர். திருவள்ளூர் பட்டு கைத்தறி சங்கத்தின் உறுப்பினரான இவர் தமிழகத்தில் இருந்து இந்த விருதுக்கு தேர்வாகியுள்ள ஒரே பெண் நெசவாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோர்வை ரக பட்டு சேலை நெசவுக்காக கீதாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இந்த பட்டுப்புடவை நெசவு குறித்து கீதா விவரித்துள்ளார். பெரும்பாலான பட்டு சேலைகளில் ஒரே இழையிலேயே உடல் பகுதியிலும், கரை பகுதியிலும் நெசவு செய்யப்படும். ஆனால் கோர்வை ரக பட்டு சேலைகளில் மட்டும் கரை பகுதி, உடல் பகுதிக்கு என தனி  பட்டு இழைகளை பயன்படுத்தியும், 4 நாடாக்களை பயன்படுத்தியும் நெய்யப்படும். இதனால் இவ்வகையான புடவைகள் அதிகளவில் கிடைப்பதில்லை. அதிக வேலைப்பாடுகளுடன் போர்வை ரக சேலை நெய்யப்படுவதால் காஞ்சிபுரத்தில் இந்த சேலை அரிதாகவே கிடைக்கும். அப்படிப்பட்ட அற்புத நெசவுக்காக கீதாவை தேசிய விருது நாடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: