×

58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம்: தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரை: 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கடந்த காலத்தில் வறட்சியால் விவசாயமே பொய்த்து விட்டதால் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் வேலைவாய்ப்புக்காக இங்குள்ள இளைஞர்கள் பலர் வடமாநிலங்களுக்கு மிட்டாய் கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாகச் சென்றனர். இதற்குத் தீர்வாக 1996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்தத் திட்டம் 110 கிராமங்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் ஆரம்பிக்கும்போது வைத்த 58 கிராம பாசனக் கால்வாய் பெயரே தற்போது வரை தொடருகிறது. இந்தத்  திட்டத்திற்காக ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1999-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. பிரதான கால்வாய் 27.735 கி.மீ. நீளத்திலும், இடது கிளைக்கால்வாய் 11.925 கி.மீ. நீளத்திலும், வலது கிளைக்கால்வாய் 10.24 கி.மீ. நீளத்திலும்  அமைக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் முதல் 18 மீட்டர் உயரம் வரை 230 பிரம்மாண்ட தூண்களுடன் தொட்டி பாலம் அமைத்து இந்த 58 கிராம பாசனக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இடையில் நிதி பற்றாக்குறையால் இந்தத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு 2008-ம் ஆண்டு மீண்டும் ரூ.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனாலும், பணிகள் விரைவாக நடக்காததால் 18 ஆண்டாக இந்தத் திட்டம்  நிறைவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்டது. கடந்த வருடம் இந்த திட்டம் முழுமை பெற்றுள்ளது. தொடர்ந்து, வைகை அணையில் இருந்து இந்தக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்நிலையில், வைகை  அணையின் நீர் மட்டம் அதிகமாக உள்ளதால், இந்த திட்டத்தின் கீழ் கால்வாய்களில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், போராட்டம் நடத்துவதாகவும் கடந்த வாரம் அறிவித்தனர்.

அதன்படி, தண்ணீர் திறக்க நிரந்ததர அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாய சங்கம் அறிவித்த போராட்டத்துக்கு வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்கம், மருந்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோக்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கவில்லை, திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடையடைப்பு போராட்டத்தால் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Vacation to Private Schools ,implementation ,Usilampatti ,Private Schools , 58 Strike Strike in Usilampatti for implementation of Rural Canal Project: Vacation to Private Schools
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...